;
Athirady Tamil News

செம்மணியில் நடந்தது மனிதப் படுகொலை! உண்மையை மறைக்க முடியாது – சிறீதரன்

0

தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நேற்று(14) நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி
புதைகுழியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம். ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி, யாரையும் கொண்டுவந்து புதைத்ததாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நாட்டின் நீதி அமைச்சர், மக்களைத் திசைதிருப்பும் வகையில் இவ்வாறான வார்த்தைகளை தெரிவிக்க கூடாது. தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போல இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது. ஏனெனில், இங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண மண்ணில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இதனை நாங்கள் சொல்லவில்லை.

இலங்கையின் கிரிசாந்தி கொலை வழக்கில் சாட்சியாக இருக்கின்ற சோமரத்ன ராஜபக்ச இதனைத் தெரிவித்திருக்கிறார். இப்போதும் தெரிவித்து வருகிறார். சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைத் தோண்ட வேண்டும்.அப்போதுதான் உண்மை வெளியில் வரும்.

அந்த உண்மைகளை மறைப்பதற்காக எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு தேவையற்ற விடயம் போன்ற கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.