;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதம்

0

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் எகு ஆலையின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

லட்சுமி மிட்டல் ஆலை
உக்ரைன் நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் எகு ஆலையின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 14 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

கட்டமைப்புகள் சேதம்
உக்ரைனின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எகு உற்பத்தி ஆலையான ஆர்சிலர் மிட்டல் கிரிவி ரிஹ் ஆலையின் முக்கிய பகுதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் மின் உற்பத்தி மற்றும் உலை செயல்பாடுகளுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்தன.இதன் காரணமாக ஆலையின் உற்பத்திப் பணிகள் ஒரு பகுதி நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து, உற்பத்தியை மீண்டும் முழுமையாக தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எப்போது தொடங்கும்?
கிரிவி ரிஹ் நகரில் அமைந்துள்ள இந்த எகு ஆலை, உக்ரைனின் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். லட்சுமி மிட்டலின் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் இந்த ஆலையில் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டிலும் இந்த ஆலை ரஷிய தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதம் காரணமாக ஆலையின் முழுமையான உற்பத்தி எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.