;
Athirady Tamil News

யாழில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவையை மீண்டும் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள்
வட மாகாணத்தில் தொடருந்து தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவைகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகவே கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் நீண்டகாலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த தொடருந்து கடவையும் மூடப்பட்டது.

எனினும், குறித்த பாதையை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்த பொதுமக்கள், தமது அன்றாடப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, தொடருந்து கடவையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திற்குள் மாற்றுப் பாதைகளும் சட்டபூர்வமான தொடருந்து கடவைகளும் காணப்படுகின்ற போதிலும், நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதை மூடப்பட்டுள்ளதால் தமக்கு நடைமுறை ரீதியான சிரமங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

நேரில் சென்று ஆராய்வு
பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் ஊடாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகிய இரு தரப்பையும் கருத்திற்கொண்டு பொருத்தமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.