பல ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக அரச நிதியில் மலையக மக்களுக்கு வீடுகள்
மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களும் இதுவரைக் காலமும் பூனாகலையில் மூடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையொன்றில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ‘மலையக மகிழ்ச்சி’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 பேர்ச் காணியுடன், சுமார் 550 சதுர அடி கொண்ட வீடுகளாக இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளன. ஒரு வீட்டுக்கான கட்டுமானச் செலவு சுமார் 32 இலட்சம் ரூபா எனவும், 50 வீடுகளுக்காக சுமார் 160 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காணி மற்றும் வீட்டின் பெறுமதியுடன் ஒவ்வொரு குடும்பமும் பெறும் சொத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், மலையகத்தில் வீட்டுப் பிரச்சினை இந்த 50 குடும்பங்களோடு முடிவதில்லை. மலையக மக்களின் வீட்டு நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்ள கடந்த கால புள்ளிவிவரங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் தோட்டத்துறையில் சுமார் 225,099 குடும்பங்கள் இருந்ததாகவும், அவற்றில் சுமார் 160,000 குடும்பங்கள் லயன் அறைகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்போது சுமார் 25,000 குடும்பங்களுக்கு மட்டுமே வாழக்கூடிய புதிய வீடுகள் கிடைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இதன்படி, சுமார் 135,000 குடும்பங்களுக்கு மேலதிகமாக தரமான வீடுகள் தேவைப்படுகின்றன. காலப்போக்கில் சனத்தொகை மற்றும் குடும்பங்களின் அதிகரிப்பால் வீடுகளின் தேவை மேலும் அதிகரிக்கலாம்.
அண்மைய ஆய்வொன்றில் பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 244,500 குடும்பங்களும் 966,700 மக்களும் வசிப்பதாகவும், தோட்டங்களில் சுமார் 160,000 பழைய லயன் அறைகள் இன்னும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், கபரகல 50 வீடுகள் முக்கியமான முன்னேற்றமாக இருந்தாலும் மலையகத்தின் ஒட்டுமொத்த வீட்டுப் பிரச்சினையுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய எண்ணிக்கையாகவே உள்ளது. ஆனால், வீட்டுப் பிரச்சினையை கடந்தகால அரசாங்கங்கள் போன்று ஒரு தேர்தல் வாக்குறுதியாக அன்றி உண்மையாக இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்துள்ளது.
கபரகல மக்களுக்காக கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் அனைத்தும் முழுமையானவை. அதாவது காணி உரிமையும் இந்த மக்களுக்கே உரித்தானவையாகும். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் கட்டப்பட்டுள்ள எந்தவொரு வீட்டுக்கும் காணி உரித்துப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அவை வெறுமனே அத்தாட்சிப் பத்திரங்களாக மாத்திரமே இருந்தன.
மலையக மக்களுக்காக அரச நிதியில் வீடுகள் கட்டப்படுவதும் கடந்த காலத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. அரசாங்க மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பதிவுகளிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கபரகலயில் கட்டப்பட்டுள்ள 50 வீடுகளும் முழுமையாக அரச நிதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளாகும். மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் 15,000 வீடுகள் வழங்கியுள்ளது என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ இந்திய மற்றும் இலங்கை ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த எண்ணிக்கையில் ஒரு கணக்கியல் குழப்பம் உள்ளது.
இந்தியாவின் அதிகாரபூர்வ பதிவுகளின்படி, மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக முதல்கட்டமாக 4 ஆயிரம் வீடுகளும், இரண்டாம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதில் 4,000 வீடுகளில் 3,900 க்கும் மேற்பட்டவை நிறைவடைந்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகத்தின் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சியுள்ள 10 ஆயிரம் வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் இந்தியா ரூ.2.8 மில்லியன் வழங்குவதுடன், உட்கட்டமைப்புக்காக இலங்கை அரசு 4 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திலும் இந்திய உதவியுடன் மலையக சமூகத்துக்காக 2,000 வீடுகளை நிர்மாணிக்க ரூ.4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவடைய இன்னும் பல சில வருடங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024/25 காலப்பகுதியில் வெளியான ஆய்வொன்றில் மலையகப் பகுதியில் 160,000 லயன் அறைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண் ஒக்டோபர் 15ஆம் திகதி ஹட்டனில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் வெளியிட்ட ‘ஹட்டன் பிரகடனம்’ மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எட்டு அம்ச கொள்கைத் திட்டமாக முன்வைக்கப்பட்டது. அதில் வீட்டுப் பிரச்சினை முக்கியமானதாக அடையாளப்படுத்தப்பட்டது.
2012/2013 தரவுகளின்படி மலையக மக்களில் 67.8 சதவீதம் பேர் லயன் அறைகளில் வாழ்வதாக பிரகடனம் சுட்டிக்காட்டியது. அதற்கு தீர்வாக வாழ்வதற்கு ஏற்ற வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதற்கு அப்பால், பிரகடனத்தில் பல முக்கிய வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. வீட்டு உரிமை மற்றும் வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகள், வீடுகள் அமைந்துள்ள காணிகளுக்கு சட்டபூர்வமான காணி உரிமை வழங்குதல், தொழிலாளர்கள் தொழிலிலிருந்து விலகிய பின்னரும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதைத் தடுப்பது, கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத தோட்டக் காணிகளை மலையக இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காகப் பயன்படுத்துதல் என்பவையாகும்.
ஹட்டன் பிரகடனம் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், அரசாங்கம் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 2,000 பயனாளிகளுக்கு வீட்டுரிமை ஆவணங்கள் வழங்கப்பட்டன. இவை இந்தியாவின் 10 ஆயிரம் வீடுகள் கொண்ட திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கு வழங்கப்பட்டவையாகும்.
இவ்வாறு மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினை நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியை கொண்ட பிரச்சினையாக உள்ளது. என்றாலும், தற்போதைய அரசாங்கம் முதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளது. படிப்படியாக இந்த மக்களை லயன் வாழ்க்கையில் இருந்து விடுவிப்பது அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.
அதன் ஆரம்பமாகத்தான் கபரகல மண்சரிவால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கான நவோதயபுரம் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்திய நிதி அல்லாமல் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு நிதியே முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஏற்பட்ட தித்வா பேரிடருக்குப் பின்னர் மத்திய மலைநாட்டில் ஆபத்தான பகுதிகளில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். அவற்றில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 8,000 வீடுகளை விரைவாக நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த அறிவிப்பின் பிரகாரம் கபரகல வீட்டுத் திட்டம் உருவாகியுள்ளதுடன், மேலும் பல வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருக்கின்றன.
அதேபோன்று மலையக மக்களின் பிரச்சினையை வெறும் வீடுகள் கட்டிக் கொடுப்பது என்ற அளவில் அணுக முடியாது. ஒரு குடும்பத்திற்கு வீடு வழங்கப்பட்டாலும், காணிக்கு சட்டபூர்வ உரிமை இல்லையென்றால், பாதுகாப்பான குடிநீர் இல்லையென்றால், முறையான வீதி இல்லையென்றால், மின்சாரம் மற்றும் கழிவுநீர் வசதிகள் இல்லையென்றால், குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிலம் இல்லையென்றால், அது முழுமையான புதிய கிராம வாழ்க்கையாக மாறாது. கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் முழுமைப்படுத்தப்படாத திட்டங்களாக இருந்தமையால் இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனால்தான் மலையக வீட்டுத் திட்டங்களை மதிப்பிடும்போது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்து வீடுகள் கட்டப்பட வேண்டும். கபரகல திட்டம் இந்த அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளதால், அந்த மக்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை இனி வாழ முடியும். இவ்வாறு கடுமையாக பாதிக்கப்படுள்ள பெருந்தோட்ட மக்களுக்கும் வெளிநாட்டு உதவிகளை எதிர்பாராது அரச நிதி வீடுகள் விரைவாக கட்டப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.