;
Athirady Tamil News

யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி

0

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதகரின் மகன் தாக்குதல்
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர் மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன.

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார்.

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.