;
Athirady Tamil News

கொட்டும் மழையிலும் 19 ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம் – பூர்வீக நிலங்களை மீளக் கையளிக்குமாறு கோரிக்கை!

0
பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று (25) 19 ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் தொடர்ந்தது.
பலாலி மக்கள் தமது பூர்வீக வாழிடங்களையும் விவசாய நிலங்களையும் இழந்து 36 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்னமும் தமது காணிகளை முழுமையாக மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை தொடர்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காணிகள் விடுவிக்கப்படாத காரணத்தால், தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுதல், விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வீடுகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிலம் என்பது வெறுமனே ஒரு சொத்தாக மட்டும் இல்லாமல், தமது குடும்பங்களின் வரலாறு, வாழ்வாதாரம், பண்பாடு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களின் வாக்குப் பலத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள், நில உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
எனவே, பலாலி மக்களின் நில உரிமைப் பிரச்சினைக்கு வெறுமனே வாக்குறுதிகளுடன் முடிவுகட்டாமல், நடைமுறைச் செயற்பாடுகள் மூலம் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.