;
Athirady Tamil News

பிலிப்பைன்சில் நடுவானில் விமானங்கள் மோதல் – 4 விமானிகள் பலி

0

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்சியின்போது 2 ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 விமானிகள் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள படாங்காஸ் மாகாணத்தின் லிபா நகரில் பெர்னாண்டோ விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் விமானப்படை விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, எஸ் எப்-260 ரகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானங்கள் நடுவானில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை

இந்த விபத்தில் விமானங்களில் இருந்த 4 விமானிகளும் உயிரிழந்தனர்.விமானப்படை தளத்தின் எல்லைக்குள்ளேயே இரு விமானங்களும் விழுந்ததாகவும், தரையில் இருந்த வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆல்வின் கேபிங்குயன் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் பறக்க தற்காலிகத் தடை

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ் எப்-260 ரக விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன. விசாரணை முடியும் வரை இந்த விமானங்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீப ஆண்டுகளாக ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த மே மாதம், வடக்கு பிலிப்பைன்சின் பெங்குவெட் மாகாணத்தில் பயிற்சியின்போது எஸ் எப் -260 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் 4 விமானிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பிலிப்பைன்சில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.