;
Athirady Tamil News

நேபாளத்தை உலுக்கிய வெள்ளம் ; சாதுரியத்தால் 1,643 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்

0

நேபாள – திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

எல்லையின் இருபுறமும் காணாமல் போன 2000த்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணியும் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ள நேரத்தில் பதட்டமடையால், நிதானமாக செயல்பட்டு 1,643 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நேபாள பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு புதன்கிழமை காலை 9:20 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் வெள்ளம் தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.

10 நிமிட இடைவெளி வெள்ளப்பெருக்கு தொடர்பாக அவருக்கு தகவல் கிடைத்தப்போது பள்ளியில் 900 குழந்தைகள் இருந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிப் பேருந்துகளிலும், நடந்தும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

தனக்குக் கிடைத்த 10 நிமிட இடைவெளியில், உடனடியாகப் பள்ளியின் அவசர எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போன் செய்து, “இங்கு வராதீர்கள், பேருந்தை அப்படியே உயரமான பகுதிக்குத் திருப்புங்கள். வரும் வழியில் பாலங்கள் இருந்தால் அதைக் கடக்க வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளார்.

பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் தப்பி மலைப்பகுதிகளுக்கு சென்றனர். பயத்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் ஃபிக்ஸ் வந்துள்ளது.

அக்குழந்தை மட்டும் இருசக்கர வாகனம் மூலம் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இறுதியாக வெள்ளம் பள்ளிக் கட்டிடங்களை அடித்துச் சென்றபோது, குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மலை உச்சியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்தனர்.

3 மாடிகள் கொண்ட வலுவான கான்கிரீட் பள்ளி கட்டடம் ஆற்றிலிருந்து 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் எஃகுப் பாலத்தின் அதே மட்டத்தில் இருந்துள்ளது.

பேரிடர் காலத்தில் சொந்த உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ராஜேந்திர தவாடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.