;
Athirady Tamil News

நேபாள பெருவெள்ளம்: அடையாளம் தெரியாத சடலங்களை புதைக்க முடிவு

0

காத்மாண்டு,

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்களை புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெருவெள்ளம்

நேபாளம்-திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.

பிணவறைகளில் உடல்கள் குவிப்பு

இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் மருத்துவமனை பிணவறைகளில் குவிந்துள்ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 2,400-க்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதைக்க முடிவு

இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்களை புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிட்வான் பகுதியில் சடலங்களை பாதுகாக்க வசதி இல்லாததால் 223 சடலங்கள் புதைக்கப்படுகின்றன. சடலங்கள் அழுகும் நிலையில் உள்ளதால் டி.என்.ஏ. மாதிரியை எடுத்துவிட்டு புதைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் டி.என்.ஏ. மாதிரி மூலம் யார் என்பது கண்டறியப்பட்டால் புதைத்த இடத்தை தோண்டி எடுத்து உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய விவரங்களை UDB.NEPALPOLICE.GOV.NP/DEAD-BODIES என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.