;
Athirady Tamil News

என் மீது வழக்கு செல்லாது ; அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ

0

ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளாா்.

அமெரிக்காவில் தொடரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கின் அடிப்படையில், வெனிசுவேலா தலைநகரில் அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையின்மூலம் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டாா்.

தற்போது புரூக்ளின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து மறுத்து வருகிறாா்.

இந்நிலையில், நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, அவரின் வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவராக, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சா்வதேச சட்டங்களின்படி இத்தகைய வழக்குகளில் இருந்து நிக்கோலஸ் மதுரோவுக்கு முழு சட்டப் பாதுகாப்பு விலக்கு உள்ளது.

மேலும், நிக்கோலஸ் மதுரோ மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’ என்று வாதிட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீது அமெரிக்க அரசுபதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, வழக்கு விசாரணையை நவ. 17-க்கு ஒத்திவைத்துள்ளாா்.

கடந்த 2019 முதல் நிக்கோலஸ் மதுரோவை வெனிசுவேலாவின் அதிபராக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், அவா் தரப்பின் இந்த வாதம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு குறைவு எனச் சட்ட வல்லுநா்கள் கருதுகின்றனா்.

அந்தவகையில், வழக்கு நிராகரிக்கப்பட்டால் அடுத்தாண்டு ஜூன் முதல் நிக்கோலஸ் மதுரோ மீதான நேரடி விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் துணை அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்று, அமெரிக்காவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறாா்.

அண்மையில், இருநாடுகளுக்கு இடையே முக்கிய எண்ணெய் ஒப்பந்தமும் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.