அல்லைப்பிட்டியில் உயிரை பணயம் வைத்து தீயை அணைத்த ஊர்காவற்துறை பொலிசார்
நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் பிரதான வீதியில் காணப்படுகின்ற நண்டு ஏற்றுமதி நிறுவனத்தின் அருகில் காணப்படுகின்ற பல காணிகள் விசமிகளால் தீ மூட்டப்பட்டு அந்த பிரதேசம் முழுவதும் தீ பரவத்தொடங்கியிருந்த நிலையில் அப்பகுதியால் பயணித்த வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் வேலணை பிரதேச செயலாளர், வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஊர்காவற்துறை பொலிசாருக்கு தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தியிருந்தார்.
சுமார் முப்பது நிமிடங்களில் அங்கு வருகை தந்த ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், வேலணை பிரதேச சபை உறுப்பினர் க. நாவலன், தீவகம் சிவில் சமூகம் உப தலைவர் கருணாகரன் குணாளன், தீவக சிவில் சமூகம் நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் கஜேந்திரன் ஆகியோரும் அவர்களோடு வருகை தந்த பொதுமகனொருவரும் இணைந்து ஆபத்தை பொருட்படுத்தாது பல மணி நேரமாக போராடி தீ பரவலை தடுத்துள்ளனர்.
இல்லாவிடில் குறித் த பகுதியில் இயங்கிவருகின்ற நண்டு ஏற்றுமதி நிலையம் முற்றாக எரிந்து நாசமாகிருக்ககூடிய சூழ்நிலையே அங்கு நிலவியிருந்தது.
குறிப்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தீ பரவலை கட்டுப்படுத்த போராடியிருந்ததாகவும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தீ பரவல் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் அங்கு காணப்பட்டதாகவும் க. நாவலன் தெரிவித்துள்ளார்.
