;
Athirady Tamil News

“15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் தா!” – சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாய்

0

பெய்ஜிங்,

சீனாவின் ஷாங்காய் நகரில், தனது பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காக சொந்த மகனுக்கு எதிராக ஒரு தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விவாகரத்தும் பாட்டியின் பொறுப்பும்
சீனாவின் ஷாங்காயின் சாங்ஜியாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சு (வயது 60). இவர் தனது மகன் லியாங் உடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அப்போது அவரது மகளுக்கு 4 வயது மட்டுமே ஆகியிருந்தது.

விவாகரத்திற்குப் பிறகு, லியாங் தனது மகளைக் கவனித்துக் கொள்ளாமல் வேலைக்காக வெளியில் சென்றுவிட்டார். இதனால் கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பேத்தியின் கல்வி, மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரச் செலவுகளையும் பாட்டியான சூ தான் தனது சொந்தப் பணத்தில் இருந்து கவனித்து கொண்டுள்ளார்.

மோதலும் நீதிமன்ற வழக்கும்
சமீபத்தில் லியாங் மறுமணம் செய்து கொண்டு, தனது புதிய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போதும் மகளைத் தன் தாயின் பொறுப்பிலேயே விட்டு சென்றார். வயது முதிர்வு மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக, தன் பேத்தியை மேற்கொண்டு வளர்க்க முடியாது என சு கூறினார். இதையடுத்து ஷாங்காய் நீதிமன்றத்தில் தனது மகனுக்கு “குடும்பப் பொறுப்பு இல்லை” என்று குற்றம் சாட்டிய அவர், 15 ஆண்டுகளாக பேத்தியை வளர்த்ததற்கான பராமரிப்பு கட்டணமாக 3,60,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.45 லட்சத்திற்கும் மேல்) வழங்க வேண்டும் என்று கோரினார்.

நீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கின் விசாரணையின் போது, தனக்கு மாத சம்பளம் 3,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37000) மட்டுமே இருந்ததால், தன் சக்திக்கு உட்பட்டே மகளைக் கவனித்ததாக மகன் லியாங் வாதாடினார். எனினும் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. குழந்தைகளை வளர்க்கும் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது என்பதால், நீதிமன்ற உத்தரவின்படி தாய்க்கு 2,00,000 யுவான் (சுமார் ரூ.24 லட்சம்) இழப்பீடாக வழங்க மகன் ஒப்புக்கொண்டுள்ளார்.

சீனாவில் கூட்டுக்குடும்ப பாரம்பரியத்தில் முதியவர்கள் பேரக் குழந்தைகளை வளர்ப்பது வழக்கமாக இருந்தாலும், அதை ஒரு கட்டாய உழைப்பாகவோ அல்லது கடமையாகவோ கருதக் கூடாது என்ற புதிய விவாதத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.