கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள், தற்போது இயங்கிவரும் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுக்கு காணப்படும் இடப்பற்றாக்குறை மற்றும் நெருக்கடி நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளித்தனர். இதன் காரணமாக சில நோயாளர்கள் சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் நீண்டகால தேவைகளைக் கருத்திற்கொண்டு முழுமையான திட்டமிடலுடன் கட்டடத் தொகுதி அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மருத்துவமனை வளாகத்திலுள்ள நிலப்பரப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதுடன், புதிய கட்டடம் அமைக்கப்படும் போது எதிர்காலத் தேவைகளுக்கேற்ப ஏனைய பொருத்தமான மருத்துவப் பிரிவுகளுக்கும் போதிய இடவசதியை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
புதிய கட்டடத்தை அமைப்பதற்கு கணிசமான நிதி தேவைப்படும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என ஆளுநர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, முன்மொழியப்படும் கட்டடத்தின் தேவையையும் பொருத்தப்பாட்டையும் முழுமையாக ஆராய்ந்து, மருத்துவமனையின் நீண்டகாலத் தேவைகளுக்கு ஏற்ப கட்டடங்கள் திணைக்களத்தின் ஊடாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் பணிப்பாளர், மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.