;
Athirady Tamil News

வடக்கில் அபிவிருத்தியை தடையின்றி முன்னெடுக்க தொழினுட்ப ஆளணி பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை

0
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்திற்கு 2026ஆம் ஆண்டில் கிடைக்கப்பெறும் அபிவிருத்தி நிதியும் பணிச்சுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், உள்ளூராட்சி தொழில்நுட்ப ஆளணியிடம் தற்போது 1,034 வேலைத்திட்டங்களுக்கான சுமார் 7,006 மில்லியன் ரூபா பெறுமதியிலான பணிச்சுமை காணப்படுவதாகவும், இவற்றில் பல்வேறு புதிய நிதித் திட்டங்களின் கீழான வேலைகளும் உள்ளடங்குவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், இவ்வளவு பெரிய பணிச்சுமைக்கு ஏற்றளவில் தொழில்நுட்ப ஆளணி இல்லாததால் மதிப்பீடு தயாரித்தல், கேள்விகோரல் நடைமுறை, மேற்பார்வை, சான்றளித்தல் மற்றும் பணிகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட பல கட்டங்களில் தாமதங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட 141 தொழில்நுட்பப் பதவிகளில் 129 பேர் மட்டுமே பணியில் இருப்பதுடன், மேலும் 194 தொழில்நுட்ப ஆளணி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வன்னிப் பகுதிகளில் சில தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து விலகியுள்ளமையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

பல வேலைத்திட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதால் தொடர்ச்சியான தள மேற்பார்வையை மேற்கொள்வதிலும் சிரமம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் எந்தவொரு திட்டத்தின் தரமும் பாதிக்கப்படாத வகையில் தேவையான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வை உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, பல்வேறு நிதி மூலங்களிலிருந்து கிடைக்கும் நிதியை மீளச் செலுத்தாமல், அவற்றை முழுமையாக அபிவிருத்திப் பணிகளாக மாற்றுவதற்கான மனிதவளத்தை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் தொடருமானால், கிடைக்கும் நிதியை உரிய காலத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது சவாலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர்,

மத்திய மற்றும் மாகாண நிறுவனங்கள் என்ற வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு தீர்வுகளை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை விரைவாகத் தேசிய மட்டத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தொழில்நுட்ப ஆளணியினரை தற்காலிகமாக அரச நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்து பயன்படுத்துதல் மற்றும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தற்போதைய தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு காலவரையறுக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் ஆகிய இரு அவசரத் தீர்வுகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தகுதியான பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இனிவரும் பணிகளை மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள தொழில்நுட்ப ஆளணியின் ஊடாக முன்னெடுப்பதற்கும், மாகாணத்துக்குச் சொந்தமான சில வீதிகளைத் தற்காலிகமாக உரிய நிறுவனங்களுக்கு கையளித்து பணிகளை மேற்கொண்ட பின்னர் மீளப் பொறுப்பேற்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், தொழில்நுட்ப ஆளணியுடன் இயங்கும் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு மேலும் அதிகளவு அபிவிருத்தி நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தகைய சவால்கள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தரமான தொழில்நுட்ப மனிதவளத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்குத் தேவையான சிறப்பு தொழில்நுட்ப ஊக்கத்திட்டம் மற்றும் தற்காலிக ஆளணி பகிர்வு முறை குறித்து தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் திறைசேரியுடன் அவசரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதி மீளச் செல்லாமல், அது தரமான பணிகளாகவும் பயனுள்ள உட்கட்டமைப்புகளாகவும் காலதாமதமின்றி மக்களைச் சென்றடைவதே இம்முயற்சிகளின் பிரதான நோக்கமாகும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாவட்டச் செயலர்கள், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், மாகாண வீதி அபிவிருத்திப் பணிப்பாளர், உள்ளூராட்சித் திணைக்களப் பொறியியலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.