;
Athirady Tamil News

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

0
அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

இனமுரண்பாடுகளைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்த்து கருணை மனு மூலமே தீர்வு காண முடியும் என அறிவிப்பு

(பாறுக் ஷிஹான் )
 
video link-https://fromsmash.com/avbT6cc2kb-dt

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார்.

அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“இவ்விவகாரத்தில் சிவஸ்ரீ சிறிதரன் எம்பி பேசிய வார்த்தைகள் மிகவும் பாரதூரமானவை. அவர் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் தெரிந்து பேசுகின்றாரா அல்லது மந்த நிலையில் பேசுகின்றாரா என்று தெரியவில்லை. அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே கலவரம் உண்டாகும் என அச்ச நிலையைப் பரப்பி வருகின்றனர். இது மிகவும் மோசமான செயற்பாடாகும்.

கடந்த காலங்களில் இலங்கையிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலையில்கூட மரண தண்டனைக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதுகூட சிங்கள – தமிழ் மக்களிடையே கலவரம் வரவில்லை. அவ்வளவு நல்லதொரு நாடுதான் இலங்கை. ஆனால், தமிழ் – முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே மோதவிடுவதற்காகத் தனது வக்கிர புத்தியுடன் இவர் இவ்வாறு கலவரம் ஏற்படும் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே, அரசாங்கம் இவரது பேச்சுகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நபிகள் நாயகம் மன்னிக்கும் குணம் கொண்டவர் எனப் பேசுகின்றனர். நிச்சயமாக நபிகள் நாயகம் மன்னிப்பின் சிகரம்தான், அவர் உயிருடன் இருந்திருந்தால் மன்னித்திருப்பார். ஆனால், இன்று நாட்டில் சட்டம் ஒன்று இருக்கின்றது. உதாரணமாக, பௌத்த நாடான இலங்கையில் கௌதம புத்தரை ஒருவர் விமர்சித்தால் அவர் மன்னிக்கப்படுவாரா? நிச்சயமாக இல்லை, அவர் சிறைத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். உணர்ச்சிவசப்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும். எனவே, இலங்கைகக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவைக் கெடுக்கும் வகையில் அரசியல்வாதிகள் பேசக் கூடாது.

தற்போது சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி குறித்து சவூதி அரேபியாவிற்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. அதனை எவரும் கெடுத்துவிடக் கூடாது. பல வருடங்கள் சவூதியில் வாழ்ந்தவன் என்ற ரீதியில் கூறுகின்றேன்; அது சாதாரண நாடல்ல, அங்கு ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியாது. அந்த நாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை அந்நாடு விரும்புமா என்பதை யோசிக்க வேண்டும்.

இப் பிரச்சினைக்குக் கருணை மனுக்கள் மூலமே தீர்வு காண முடியுமே தவிர, ஆர்ப்பாட்டங்களாலோ கவனயீர்ப்புப் போராட்டங்களாலோ பலனில்லை. அனோஜன் செய்தது சாதாரண குற்றமல்ல, முழு முஸ்லிம்களையும் காயப்படுத்திய குற்றமாகும். இருப்பினும், எமது நாட்டுப் பிரஜையான அனோஜன் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்பி வர வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.