குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி மற்றும் நெடுந்தீவு மகா வித்தியாலய விளையாட்டு அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகளை அரசாங்க அதிபர் நேரில் ஆய்வு
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்து இணைப்பாக விளங்கும் குறிகட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்கான அணுகுச் சாலை புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், இன்றைய (23.09.2026) நேரில் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
குறிகட்டுவான் இறங்குதுறைக்கான அணுகுச் சாலையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்ட அரசாங்க அதிபர், முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திப் பணிகள் ரூ.1,283.80 மில்லியன் செலவில் இரு கட்டங்களாக முன்னெடுப்பு!
குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்டப் பணிகள் 04.ஒக்டோபர் மாதம் 2025 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டப் பணிகள் 2026.04.22 அன்று ஆரம்பிக்கப்பட்டன.
இவ்விரு கட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்குபற்றி அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்
ரூ.1,283.80 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முதலாம் கட்டமாக ரூ.299.80 மில்லியன் செலவில் அணுகுச் சாலை மற்றும் நடைபாதையுடனான வீதிப் புனரமைப்புப் பணிகளும், இரண்டாம் கட்டமாக ரூ.984 மில்லியன் செலவில் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்திட்டங்கள் நிறைவு பெறுவதன் மூலம் நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்குச் செல்லும் போக்குவரத்து மற்றும் அணுகல் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணங்கள் இலகுபடுத்தப்படும். இதனூடாக தீவுப் பகுதிகளின் பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு அபிவிருத்திப் பணிகளுக்காக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் ரூ.22.46 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கமைவாக, அப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்து வித்தியாலய அதிபருடனும் கலந்துரையாடினார் என்பதுடன், வீதி அபிவிருத்தி பணிகளையும் ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
