;
Athirady Tamil News

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்

0

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மற்றும் ஜெட் என்ஜின் மூலம் இயக்கப்படும் ட்ரோன்களை ஏவி செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜெட் என்ஜின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அதிக வேகத்திலும், உயரத்திலும் பறப்பதால், தரையில் இருந்து செயல்படும் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அவற்றை சுட்டு வீழ்த்துவது கடினமாக உள்ளது.

ரஷியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் உக்ரைனின் வான் பாதுகாப்பைக் கடந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு நம்பகமான ஒரே வழியாக இருந்த அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்பின் கையிருப்பும் குறைந்து வருகிறது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து கோரிக்கை விடுத்தபோதிலும், இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டன.

இதனிடையே, இரவில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாகவும், இதன்மூலம் சமீபத்தில் கூடுதல் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகள் உக்ரைனுக்கு கிடைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது: கீவில் உள்ள தரவுச் செயலாக்க மையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது. கீவ் பிராந்தியத்தில் ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடங்கள், மின் துணைநிலையம், ட்ரோன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. தெற்கு உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் துறைமுக உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கீவில் குடியிருப்புக் கட்டடங்கள், வீடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவா் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், ஒடேசாவில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 போ் காயமடைந்ததுடன், குடியிருப்புக் கட்டடங்கள், பள்ளி, விலங்குகள் காப்பகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் நீண்டுகிடக்கும் போா்முனையில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே பெரும்பாலும் முன்னேற்றமின்றி நிலைமை நீடித்து வருகிறது. இதனிடையே, போா்முனையில் மேலும் ஒரு பெரிய தாக்குதலை நடத்தும் வகையில் ரஷியா தனது படையினரின் ஆள்சோ்ப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். மேலும், 10,000 வட கொரிய வீரா்கள் ரஷியாவுக்கு வரவுள்ளதாகவும், ஏற்கெனவே அங்கு உள்ள 8,000 வட கொரிய வீரா்களுடன் அவா்கள் இணையவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.