சவூதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்
இந்நிலையில், மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட பின்னரும் சிவராசா அனோஜன் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.
அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, அவரது மரண தண்டனை மாத்திரமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும், அவரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.
சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஆரம்பத்தில் விசாரணை நடத்திய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உபுல் குமரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அனோஜன் கைது செய்யப்பட்டு முதன்முதலில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் மீண்டும் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணைகள் தொடரவுள்ளன. இந்த நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இடம்பெறக்கூடும் என உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.
முதல் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது தண்டனை குறைக்கப்பட்டு அனோஜன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.
எனவே, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், அனோஜனுக்கு எதிரான வழக்கு முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
அடுத்தகட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே அவரின் விடுதலை அல்லது நாடு திரும்புவது தொடர்பான நிலைமை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் உபுல் குமரப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், சிவராசா அனோஜன் இதுவரை தனது குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவில்லை என அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்துள்ளார்.
அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது தொடர்பில் குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக அமையவுள்ளன.
மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமை நிம்மதியளிக்கும் முன்னேற்றமாக இருந்தாலும், அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார் அல்லது இலங்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான முடிவு வெளியாகவில்லை.