மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்
மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவி இடையே தகராறு
குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்த விஸ்வராஜ்சிங் கோஹில் என்ற நபர் தபால் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஸ்வராஜ்சிங் கோஹிலுக்கும், தாராபா சர்வெயா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக மனைவி தாராபா சர்வெயா வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக அக்டோபர் 9ம் திகதி கோஹில் நீதிமன்றத்திலும் ஆஜராகியுள்ளார்.
உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
இந்நிலையில் கணவர் விஸ்வராஜ்சிங் கோஹில், மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ஹரிச்சந்திரகாட் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்கண்கடா என்ற 1700 அடி ஆழமான மலைப் பகுதியில் இருந்து கீழே விழுந்து தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரை துறப்பதற்கு முன்னதாக விஸ்வராஜ்சிங் கோஹில் வெளியிட்ட 13 நிமிட வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், நவீன காலத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் தன் மீதும் தன்னுடைய குடும்பத்தினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
பெண்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்கள் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான மன மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்த பயன்படுத்தப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
விஸ்வராஜ்சிங் கோஹில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மலை அடிவாரத்தில் இருந்த அவரது இருசக்கர வாகனம் மற்றும் தொலைபேசி வைத்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் ட்ரோன் கேமராக்கள் மூலம் மலை ஏறும் வீரர்களின் உதவியுடன் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.