;
Athirady Tamil News

2027ஆம் ஆண்டுக்கான வரைவு வரவு செலவுத்திட்டம்: நாவிதன்வெளி பிரதேச சபை பொதுமக்களிடம் கருத்துக்களைக் கோருகிறது

0

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரைவு வரவு செலவுத்திட்டம் (Draft Budget), கடந்த 2026.10.14 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு பிரதேச சபைச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வரைவு வரவு செலவுத்திட்டமானது, பிரதேச சபையின் எதிர்கால நிதித் திட்டமிடல், பொதுச் சேவைகள் மேம்பாடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகும்.

வரைவு வரவு செலவுத்திட்டம் தொடர்பாகப் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கும், அதனைப் பார்வையிடுவதற்கும் ஏதுவாக நாவிதன்வெளி பிரதேச சபையின் பொது நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.நாவிதன்வெளி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் இதனைப் பார்வையிட முடியும்.

பொதுமக்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பில் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம்:பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான புதிய முன்மொழிவுகள்.
பொதுச் சேவைகளை மேலும் சிறப்பாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்.மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான கருத்துக்கள்.
வரைவு வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள்.பிரதேசத்தின் நலன்கருதி முன்வைக்கப்பட வேண்டிய ஏனைய ஆக்கபூர்வமான கருத்துக்கள்.

பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழியப்படும் திருத்தங்களை 2026.10.26 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் தயாரித்து, நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் அல்லது தவிசாளர் அவர்களிடம் நேரடியாக ஒப்படைக்க முடியும்.

பிரதேசத்தின் தேவைகளை சரியான முறையில் அடையாளம் காண்பதற்கும், உள்ளூராட்சி நிர்வாகத்தின் திட்டமிடல் நடவடிக்கைகளில் மக்களின் குரலைப் பிரதிபலிப்பதற்கும் இச்செயற்பாடு மிக முக்கியமானது என்பதால், பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.