;
Athirady Tamil News

துரையப்பா விளையாட்டரங்கில் யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட போட்டிகள் : 48 அணிகள் பங்கேற்பு!

0
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்  நடைபெறவுள்ள மாவட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த 06 உதைப்பந்தாட்ட சங்கங்களின் 48 அணிகள் பங்கேற்க உள்ளன 

விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டித் தொடரை இவ்வாண்டுக்குள் நடத்தி முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமராட்சி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வலிகாமம், மருதங்கேணி மற்றும் தீவகம் ஆகிய ஆறு உதைபந்தாட்டச் சங்கங்களின் ஊடாக, நொக்-அவுட் முறையிலான போட்டிகளின் மூலம் தலா எட்டு கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இச் சுற்றுத் தொடரைச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் நடத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், மைதான ஒழுங்குபடுத்தல்கள், போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் தெரிவு, போட்டி முறைமைகள், நடுவர் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ப. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் உதைபந்தாட்டச் சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.