;
Athirady Tamil News

சீனாவில் ‘ராட்சத கரப்பான் பூச்சி’ முட்டை டார்ட்ஸ்: இணையத்தை உலுக்கும் வினோத உணவு!

0

பெய்ஜிங்,

சீனாவின் ஷுண்டே நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ராட்சத கரப்பான் பூச்சிகள் அமர்ந்திருப்பது போன்ற வினோத பலகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

வினோத உணவு

சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரில் பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் பார்ப்பதற்கு அச்சு அசலாக ராட்சத கரப்பான் பூச்சிகள் அமர்ந்திருப்பது போன்ற தோற்றமளிக்கும் “வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்” என்ற வினோத பலகாரத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

கரப்பான் பூச்சியா?

இது பார்ப்பதற்கு அச்சுறுத்தும் கரப்பான் பூச்சிகள் போல காட்சியளித்தாலும், அவை உண்மையில் கரப்பான் பூச்சிகள் அல்ல. அவை “டைவிங் பீட்டில்ஸ்” எனப்படும் நீர் வண்டுகள். சீன பாரம்பரிய மருத்துவத்தில் இந்த நீர் வண்டுகள் உடல் ஆரோக்கியத்திற்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தயாரிப்பும் சுவையும்

உணவக உரிமையாளர் பேன் இதுகுறித்து கூறுகையில், “இந்த வண்டுகளின் துர்நாற்றம் முழுமையாக நீக்கப்பட்டு, பின்னர் அவற்றின் இறக்கைகள் உடையாத வண்ணம் மிகக் கவனமாக எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கப்படுகின்றன. பின்னர் இனிப்பான முட்டை மீது இந்த உப்புத்தன்மை கொண்ட வண்டுகள் வைக்கப்படுவதால், இது உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் இனிப்பு கலந்த ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

விலை -வாடிக்கையாளர் வரவேற்பு

3 முட்டை டார்ட்ஸ் அடங்கிய ஒரு செட் 28 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 400) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சமூக வலைதளங்களில் இதன் புகைப்படங்கள் வெளியாகி, பலருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த வினோத உணவை ருசிப்பதற்காகவே கங்க்ஜோ மற்றும் ஹாங்காங் போன்ற அண்டை நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்திற்கு தினசரி படையெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.