தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம்
தெனியாய பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (7) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகளில் கடற்படையினரும் பொலிஸாரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேடுதல் நடவடிக்கை
தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள கெலேதொல எனும் இடத்திற்கு நீராடச் சென்ற நான்கு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களுள் 6 பேர் குறித்த பகுதியில் நீராடச் சென்றுள்ளனர்.
அவர்களிலேயே நால்வர் நீரில் மூழ்கிக் காணாமல்போயிருந்தனர்.
காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையினரும் பொலிஸாரும் நேற்று பிற்பகல் தொடங்கிய தேடுதல் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போதே இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.