;
Athirady Tamil News

பருத்தித்துறை நகர சபை விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு -தவிசாளர் குற்றங்களில் இருந்து விடுவிப்பு

0
பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நகர சபையின் தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும், முன்னாள் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொடர்பில் ஆரம்பகட்டப் புலனாய்வுகளை மேற்கொள்வதற்கும், நகர சபை உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதற்காக நிபுணத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, 2026 மார்ச் 12ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரைத் தனிநபர் விசாரணைக் குழுவாக ஆளுநர் நியமித்திருந்தார்.

குறித்த விசாரணைகள் நிறைவடைந்து அதன் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே தற்போதைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக்கான காணி கொள்வனவு நடவடிக்கையில், மதிப்பீட்டு அறிக்கைக்கு முரணாகச் செயற்பட்டு, மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகமான கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் விசாரணை அறிக்கையில் அவதானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் மேலதிக விசாரணைகள் அவசியம் என அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய, குறித்த காணி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து உரிய அதிகாரங்கள் கொண்ட தரப்பினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.