;
Athirady Tamil News

கோஸ்டாரிகா: அரசியல்வாதிகள், போதைப்பொருள் கும்பல்கள் தொடர்பை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் படுகொலை

0

சான் ஜோஸ்

கோஸ்டாரிகாவில் அரசியல்வாதிகள், போதைப்பொருள் கும்பல்கள் இடையேயான தொடர்பை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார்.

கோஸ்டாரிகா நாட்டில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி பத்திரிகையாளர் கமிலோ ரோட்ரிக்ஸ் (வயது 51) என்பவர் செய்தியாக வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வீடியோ

இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கமிலோ ரோட்ரிக்ஸ், ஊடக துறையில் பணியாற்றுவதுடன், சமூக ஊடகங்களில் பிரபலங்கள், நீதிபதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதில், அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றியும் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், தலைநகர் சான் ஜோஸ் நகருக்கு வடக்கே, ஹெரதியா மத்திய மாகாணத்தில் சான் மிகுவேல் டே சான்டோ டாமிங்கோ பகுதியில் வைத்து, காரில் வந்த அவரை நோக்கி, பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு விட்டு தப்பிச்சென்றனர். இதில், படுகாயமடைந்த அவர் பலியானார்.

அதிபர் மீதும் குற்றச்சாட்டு

கடந்த இரு தசாப்தங்களில், அந்நாட்டில் பத்திரிகையாளர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த காலத்தில் பல முறை, போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடம் இருந்து, அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டு உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்திற்கு அதிபர் லாரா பெர்னாண்டஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அதிபர் லாராவின் வீடு, குற்ற கும்பலுடன் தொடர்புடைய நிறுவனம் கட்டியது என கடந்த காலத்தில், வீடியோவில் கமிலோ குற்றச்சாட்டாக தெரிவித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், லாரா அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், கமிலோவுக்கு எதிராக அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார். ஒரு ஜனநாயக சமூகத்தில், போதைப்பொருள் அல்லது ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுவோரை அமைதிப்படுத்துவது என்பது சகித்து கொள்ள முடியாதது என்று அரசு வழக்கறிஞர் கார்லோ டையஸ் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.