;
Athirady Tamil News

சீனக் கப்பல்: இராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை!! (கட்டுரை)

0

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என, ஓகஸ்ட் 13ஆம் திகதி, தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.

‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து, கடும் இராஜதந்திர அழுத்தத்தை, கடந்த தினங்களில் இலங்கை சந்தித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, ரணில் ஜனாதிபதியாகிய சில வாரங்களிலேயே, ஒரு மிகப்பெரிய இராஜதந்திர சவாலை சந்திக்க வேண்டிய சூழலை, இது உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது; அமெரிக்காவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. இவ்வளவு ஏன், சில நாள்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் இராணுவக் கப்பல் ‘தைமூர்’ இலங்கைக்கு வந்திருந்தது.

இந்த நிலையில், சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை மட்டும், ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது வாஸ்தவமான கேள்வி.

சாதாரண இராணுவக் கப்பலைப் போன்றதல்ல ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பல். ‘ஆராய்ச்சிக் கப்பல்’ என்ற பதம், ‘யுவான் வாங் 5’ கப்பலை விளிக்கப் பயன்பட்டாலும், ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில், அது ‘ஒற்றறியும் கப்பலாகவே’ கருதப்படுகிறது.

குறிப்பாக, இந்தியா இதனை ஒற்றறியும் கப்பலாகவே பார்ப்பதோடு, இலங்கைக்கான இதன் வருகையை, தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான பெரும் சவாலாகப் பார்க்கிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘யுவான் வாங் 5’ கப்பல், 2007இல் இயங்கத் தொடங்கியது. கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்தக்கப்பல், குறைந்தது 222 மீற்றர் நீளமும் 25.2 மீற்றர் அகலமும் கொண்டதாகவும், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டமைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘யுவான் வாங் 5’ என்பது, சீனாவின் ‘யுவான் வாங்’ தொடரின் மூன்றாம் தலைமுறை விண்வெளி கண்காணிப்பு கப்பலாகும். ‘யுவான் வாங் 5’ சமீபத்தில், ‘வென்டியன்’ ஆய்வக தொகுதியை தொடங்குவதற்கான கடல்சார் கண்காணிப்பு பணியை, வெற்றிகரமாக முடித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. இது, சீன ‘டியாங்காங்’ விண்வெளி நிலையத்தின் முதல் ஆய்வக தொகுதி ஆகும்.

இந்தக் கப்பலானது, இதுவரை 5,80,000 கடல் மைல்களுக்கு மேல் பாதுகாப்பாகப் பயணித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், பசிபிக் பெருங்கடலில் ‘லாங் மார்ச்-5பி’ ஏவுகணையை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு, அளவிடும் பணிக்காகவும் இது பயன்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன், பல சர்வதேச துறைமுகங்கள் வழியாக, 20,000 கடல் மைல்களுக்கு மேல் பயணித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘யுவான் வாங் 5’ கப்பல் தொடர்பில், இந்தியா அச்சம் கொள்வதற்கான பிரதான காரணம், அதன் ஒற்றறியும் வீச்செல்லையாகும். பல செய்தித்தளங்களும் இந்தக் கப்பல் 700 – 750 கிலோ மீற்றர் அளவுக்கான ஆய்வு வீச்சு எல்லையைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆகவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தக் கப்பல் நின்றால், அதன் ஒற்றறியும் வீச்செல்லைக்குள் இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள ‘இஸ்ரோ’வின் ‘சதீஷ் தவான் விண்வெளி மையம்’, திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ‘இஸ்ரோ’வின் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’, கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகள், தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஆறு கடற்படைத்தளங்கள், இந்திய கடற்படையின் தெற்குக் கட்டளையகம் உள்ளிட்ட இவையெல்லாம் வரும் என்பதுதான் இந்தியாவின் பெருங்கவலை.

மேலும், ஜூன் 28ஆம் திகதி, இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்காக சீனா அனுமதி கோரிய போது, ஓகஸ்ட் 11 முதல் 17 வரையான திகதிகளுக்கே அனுமதி கோரப்பட்டிருந்தது. இது ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திரதினத்தை மையப்படுத்திய காலமாக அமைந்ததும் இந்தியாவை மேலும் சலனப்படுத்தி இருக்கலாம்.

‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பல், இலங்கைக்கு இந்தக் காலப்பகுதியில் வருவதற்கான எந்த அத்தியாவசியத் தேவையும் இல்லை. மேலும், இலங்கையின் வௌிவிவகார அமைச்சு குறித்த, கப்பலின் வருகைக்கான ஒப்புதலை அளித்த காலம் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகிறது.

ஜூலை 12ஆம் திகதி என்பது, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வௌியேறி, ரணிலை பதில் ஜனாதியாக நியமித்துவிட்டு, பதவி விலகாது இருந்த குழப்பகரமானதொரு காலப்பகுதி ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அன்றி, வௌிவிவகார அமைச்சராக இருந்த ஜீ.எல் பீரிஸ், இந்தக் கப்பலின் வருகைக்கு அனுமதியளித்தது ஏன் என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இது மிகப்பெரியதோர் இராஜதந்திர சவாலாக மாறும் என்பதை, ஜீ.எல் பீரிஸ் அறிந்திருக்கவில்லையா? அல்லது, எப்படியும் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான்; எனவே, அந்த அரசாங்கத்தில் தனக்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிந்துகொண்டே, வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்தாரா என்றும்கூட கேட்க வேண்டியதாக இருக்கிறது.

ஓர் அரசாக இலங்கையானது, இன்னோர் அரசுக்கு, அதன் வேண்டுகோளை ஏற்று அனுமதியளித்துவிட்டு, அதைப் பின்னர் மறுப்பது என்பது, இராஜதந்திரப் பேரிடராகும். அதைச் செய்வது, அவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவைக் கடுமையாகப் பாதிக்கும்.

சீனா, மிக நீண்டகாலமாக இலங்கைக்கு நல்ல நண்பனாகவே இருந்திருக்கிறது. ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான், சீனா வட்டிக்கடை வியாபாரியாக மாறியது. ஆனாலும், சீனா நட்பு நாடுதான்.

நட்பு நாடாக இருந்தாலும், அதை மீண்டும் மீண்டும் சீனா சொல்லிக்காட்டினாலும், இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த கடந்த மாதங்களில் சீனா, இலங்கைக்கு என்ன உதவிகளைச் செய்திருந்தது?

ஏறத்தாழ 572 பில்லியன் டொலர் கையிருப்பிலுள்ள இந்தியா, கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டொலர் அளவுக்கான கடன் உதவிகளை, இலங்கைக்கு உதவி மிகவும் தேவைப்பட்டதொரு காலப்பகுதியில் வழங்கியிருந்தது. ஆனால், ஏறத்தாழ 3,480 பில்லியன் டொலர் கையிருப்பிலுள்ள சீனா, இலங்கைக்கு உதவி மிகவும் தேவைப்பட்டதொரு காலப்பகுதியில் எந்தளவு உதவிகளை வழங்கியிருந்தது? இவையெல்லாம், இலங்கையின் சாதாரண குடிமக்களின் மனதில் எழும் கேள்விகள் ஆகும்.

ஆகவே, இந்தியாவைச் சீண்டிப் பார்க்க சீனா செய்யும் இந்தப் ‘பனிப்போர்’ வகையிலான கைங்கரியத்துக்கு, இலங்கை ஏன் பலிகடாவாக வேண்டும்? இதுவும் இலங்கையின் சாதாரண குடிமக்களின் மனதில் எழும் கேள்வி ஆகும்.

சீனாவுக்கும் இந்தியாவுதுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையின் நிலை பரிதாபகரமானது. சீனா, இலங்கையின் நட்பு நாடு; எதிரி நாடல்ல. ஆகவே, சீனாவின் கோரிக்கைகளை நிராகரிக்க, இலங்கைக்கு நியாயமான காரணங்கள் தேவை.

இந்தியாவின் நலனை மையமாகக்கொண்டு மட்டும் இலங்கை, தனது வௌிநாட்டுக் கொள்கையை வகுக்க முடியாது. ஆனால், இலங்கையின் நட்பு நாடும் அயல்நாடும் பெரியண்ணனுமான இந்தியாவைத் தவிர்த்துவிட்டும் இலங்கை ஒரு வௌிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருக்க முடியாது. இதுதான், இலங்கை சிக்கியுள்ள சிக்கலின் சிக்கல் நிலை.

மேலும், இலங்கையின் மொத்தக்கடனில் 10% சீனாவால் வழங்கப்பட்டது. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற, கடன் மீள்கட்டமைப்புச் செய்ய, சீனாவின் ஒத்துழைப்பு அவசியம். ஆகவே, சீனாவை இலங்கை உதாசீனம் செய்யவும் முடியாது.

மறுபறத்தில், இதன் அரசியல் பக்கத்தைப் பார்த்தால், ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், அவர் ஜனாதிபதியாவதற்கு இந்தியா முட்டுக்கட்டையாகச் செயற்பட்டது என்பதுதான் பொதுவிலுள்ள நம்பிக்கை. அமெரிக்காவும் ரணிலை ஆதரித்திருக்கவில்லை. அதற்கான காரண காரியங்கள் தனித்து ஆராயப்பட வேண்டியவை.

ஆகவே, தன்னை எதிர்க்காத சீனாவை, தனக்கு முட்டுக்கட்டை போட நினைத்த இந்தியாவுக்காகவும், தன்னை ஆதரிக்காத அமெரிக்காவுக்காகவும், எதிர்க்க வேண்டிய தேவை, ரணிலுக்கு இல்லை. டளஸ் ஜனாதிபதியாகிவிடுவார் என்பது, இந்தியாவும் அமெரிக்காவும் கொழும்பிலுள்ள ஆங்கிலம் பேசும், தம்மைத்தாமே ‘சிவில் சமூகம்’ என முன்னிறுத்தும் சிலரும் போட்ட தப்புக்கணக்கு.

ஆகவே, அரசியல் ரீதியில் இந்தியாவுக்காகவும் அமெரிக்காவுக்காகவும் வேலைசெய்ய வேண்டிய தேவை, ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது. ஆனாலும், இந்தியாவுடனான இலங்கையினது நீண்டகால நல்லுறவைக் கருத்தில் கொண்டு, சீனாவிடம் கப்பலின் வருகையை தாமதிக்க முடியுமா என்று இலங்கை கோரியிருந்தது. அதன்படி, இந்திய சுதந்திர தினம் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் 16ஆம் திகதி, சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை வரவிருக்கிறது.

இலங்கையின் வரமும் அதன் அமைவிடம்தான்; சாபமும் அதுவேதான்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.