;
Athirady Tamil News

அரபு நாடுகளை சிக்க வைக்கும் சீனாவின் கடன் பொறி! (கட்டுரை)

0

“நெருக்கடி என்பது, ஆபத்தான காற்றில் சவாரி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது. அவ்வாறு, உள்நாட்டு யுத்தங்களும், முரண்பாடுகளும், பிளவுகளும், நெருக்கடிகளும் நிறைந்த பிராந்தியமான மேற்கு ஆசிய பிராந்திய காற்றில் சீனா சவாரி செய்ய ஆரம்பித்திருக்கிறது.

சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை திட்டம் (Belt and Road Initiative) உலக நாடுகளுக்கு தனது உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு செல்லும் திட்டம் என்று சீனா சொல்லி வருகிறது. தற்போது அந்த திட்டத்தை மேற்கு ஆசியாவை நோக்கி சீனா நகா்த்தி வருகிறது.

இது வெறுமனே பொருளாதார உதவித் திட்டம் என்பதை விட, சீனாவின் ஒரு பாதை ஒரு பட்டி என்ற கடன் பொறி ராஜதந்திர திட்டத்திற்குள் மேற்கு ஆசியாவை உள்வாங்கும் திட்டமாகவே பாா்க்கப்படுகிறது.

சீனா தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நிகழ்ச்சித் திட்டமாக இந்தத் திட்டத்தை பல நாடுகளில் செயற்படுத்தி வருகிறது. ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகள் என்று பல நாடுகள் சீனாவின் இந்த கடன் பொறியில் சிக்கித் தவித்து வருகின்றன.

இதுவரை 20 அரபு நாடுகளின் மீது சீனா தனது திட்டங்களை முன்வைத்துள்ளது, இவற்றில் பல நாடுகள் ஏற்கனவே இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. சீனாவின் “பெல்ட் அண்ட் ரோட்” திட்டத்தில் 2022 இல் சிரியா 20 வது அரபு நாடாக இணைந்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளா்ச்சித் திட்டத்தில் பல அரபு நாடுகள் ஏற்கனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஏனைய நாடுகள் முன்மொழிவுகளுடன் இணைந்துள்ளன.

இவற்றில் சோமாலியா (2015), ஈராக் (2015), எகிப்து (2016), ஏமன் (2017),மொராக்கோ (2017), லெபனான் (2017), சூடான் (2018), அல்ஜீரியா (2018), , சவுதி அரேபியா (2018) ), துனிசியா (2018), யுஏஇ (2018), லிபியா (2018), ஓமன் (2018), மொரிட்டானியா (2018), குவைத் (2018) ), பஹ்ரைன் (2018), ஜிபூட்டி (2018), கத்தார் (2019), சிரியா (2022) ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட, பொருளாதார வளங்கள் தீர்ந்துபோன மேற்கு ஆசியாவில், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பாரசீக வளைகுடா வரையிலான பகுதிகளை ஒரு வளா்ச்சியடைந்த உலக சந்தையின் மையமாக மாற்றி, பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சீனா அரும்பாடுபட்டு வருகிறது.

முக்கியமாக, ரயில், சாலை மற்றும் நீர் வழியாக இந்த நாடுகளை இணைப்பதன் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போவதாக சீனா சொல்லி வருகிறது. என்ற போதிலும்,, நவீன காலனித்துவ சுரண்டல் அரசியலை சீனா கையிலெடுத்து செயற்படுவதாக பல நாடுகள் சீனாவின் மீது குற்றம் சாட்டி வருகின்றன.

அண்டை நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார நன்மைகளுக்காகவும், அந்நாடுகளின் மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இணைந்து செயல்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சீனா இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து வருகிறது.

போர், பயங்கரவாதம், அழிவு மற்றும் பொருளாதார வளப் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தை சீனா தனது கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு (2022) ஜனவரி 12 ம் திகதி, சிரியா அதிகாரப்பூர்வமாக சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை என்ற ”பெல்ட் அண்ட் ரோட்“ திட்டத்தில் இணைந்தது. ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடனான சிரியாவின் நட்பு சீனாவிற்கு பிராந்தியத்தில் சாதகமான நிலையை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிரான களமென்று தொிந்தே சீனா தனது கால்களை சிரிய பிராந்தியத்தில் பதித்துள்ளது.

கடந்த கோடைக்காலத்தில், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ மேற்காசியாவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், $400 பில்லியன் ஒத்துழைப்புத் திட்டத்தில் ஈரான் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்தாா். இந்த ஒப்பந்தம் சீன-ஈரானிய 25 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் சிரியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் தேர்தல் வெற்றியை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இதன்மூலம் மத்தியதரைக் கடல் மற்றும் ஆசிய சந்தைகளுடன் மீண்டும் சிரியாவை இணைக்க, ஏழு வருட சீன-சிரிய கூட்டாண்மைக்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி சிரியாவிற்கான புனரமைப்புச் செலவு $250 முதல் $400 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவிற்கு உதவுவதிலும், நீண்ட கால முதலீடுகளை செய்வதிலும் சீனா ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றே தொிகிறது. சிரியாவில், முக்கிய போக்குவரத்து தாழ்வாரங்களை உள்ளடக்கிய பிராந்தியங்களை உறுதிப்படுத்துவதில் சீனா அதிகம் ஆா்வம் காட்டி வருகிறது.

சிரியாவின் புவியியல் ரீதியிலான இருப்பிடமும், அந்நாட்டு மண்ணில் புதைந்துள்ள இயற்கை வளங்களும் சீனாவை சிாியாவின் பக்கம் ஆா்வத்தைத் தூண்டியுள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான வர்த்தகத்திற்கான மையமாக சிரியா இருந்து வந்திருக்கிறது.

தென் சீனக் கடலை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரிக்கும் மலாக்கா, சுண்டா (Sunda Strait) மற்றும் லொம்போக் (Lombok Strait) போன்ற நீரிணைகளிலிருந்து ஒரு மாற்று வழித்தடத்தை சிரியாவின் கடற்பிராந்தியம் வழங்குகிறது. சுண்டா நீரிணை இந்தோனீசியத் தீவுகளான ஜாவாவுக்கும், சுமாத்திராவுக்கும் இடையே அமைந்துள்ள நீரிணையாகும். லொம்போக் நீரிணை இந்தோனீசியத் தீவுகளான பாலிக்கும், லொம்போக்குக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நீரிணைகளும், ஜாவாக்கடலை, இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கின்றன.

தற்போது இந்த பிராந்தியத்தின் ஆதிக்கம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. சிரியாவிற்கு உதவி செய்வதன் மூலம் இந்த பிராந்தியத்தின் கடல் சாா் ஆதிக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயற்சி செய்கிறது.

சிரிய ஜனாதிபதி பசாா் அல் அஸாத் ஏற்கனவே ஐந்து கடல் பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வேலைத் திட்டமொன்றை அறிவித்திருந்தாா். வெளி நாட்டு சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக அந்த இலக்கு தோல்வியில் முடிந்து போனது.

சீனாவின் கடல்சாா் ஆதிக்க கட்டமைப்புக்குள் சிரியாவை கொண்டு வருவதன் மூலம் தனது அதிகார வலையமைப்பை விரிவு படுத்த முடியும் என்று சீனா கணக்கிட்டுள்ளது.

2004ம் ஆண்டு சிரிய ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்ட இந்த “ஐந்து கடல் பார்வை” (The Five Seas Vision) திட்டத்தின் மூலம் கடல் வர்த்தகப் பாதைகளுக்கு சிரியாவின் புவியியல் ரீதியிலான இருப்பிடம் முக்கியத்துவத்தைப் பெற்றது.

இந்தத் திட்டம் பிராந்திய ஆற்றல் மற்றும் கடல் போக்குவரத்து வலையமைப்பின் மையத்தில் சிரியாவின் புவியியல் நிலையைப் பயன்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஜனாதிபதி அசாத் தனது திட்டத்தை அண்டை நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் பிராந்தியங்களைக் கடந்து சென்று கட்டமைத்தாா். துருக்கி, ருமேனியா, உக்ரைன், அஸர்பைஜான், ஈரான், ஈராக் மற்றும் லெபனான் உட்பட பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இந்த ஒப்பந்தங்களில் நாடுகளுக்கிடையிலான எரிபொருள்களைக் கொண்டு செல்லும் மிகப்பெரிய குழாய் இணைப்புத் திட்டங்கள் அடங்கியிருந்தன. ஈரானில் இருந்து எரிவாயு குழாய் இணைப்பு, அஸர்பைஜானில் இருந்து எரிவாயு குழாய் இணைப்பு, துருக்கிக்கான குழாய் இணைப்பு; மற்றும் வடக்கு ஈராக்கில் இருந்து சிரியாவுக்குள் எண்ணெய்யை கொண்டு செல்வதற்கான குழாய் இணைப்பு போன்றவை இதில் அடங்கியிருந்தன.

2004 இல் தொடங்கப்பட்ட சிரியாவின் இந்த ஐந்தாண்டுத் திட்டம், “ஐந்து கடல் பார்வையை” (The Five Seas Vision) நனவாக்குவதற்குத் தேவையான சாலைகள், துறைமுகங்கள் மற்றும் குழாய்களை நிா்மாணிப்பதற்கான வேலைத் திட்டங்களைக் கொண்டிருந்தது.

எவ்வாறாயினும், சிரியாவின் ஜனாதிபதி அசாத்தின் நகா்வு பிராந்தியத்திற்கு அப்பாலும் விரிவடைந்து செல்லும் என்ற செய்தியை “தி வீக்லி மிடில் ஈஸ்ட்” என்ற ஊடகத்திற்கு, 2009 ம் ஆண்டு அசாத் வழங்கியிருந்தார்:

“சிரியா, துருக்கி, ஈராக் மற்றும் ஈரான் இடையே பொருளாதார இடைவெளி ஒருங்கிணைக்கப்பட்டவுடன், நாங்கள் மத்திய தரைக்கடல், காஸ்பியன், கருங்கடல் மற்றும் [பாரசீக] வளைகுடாவை இணைப்போம்…! நாம் மத்திய கிழக்கில் மட்டும் முக்கியமானவர்கள் அல்ல. . . இந்த ஐந்து கடல்களையும் நாம் இணைத்தவுடன், முதலீடு, போக்குவரத்து போன்றவற்றில் முழு உலகத்தின் தவிர்க்க முடியாத குறுக்குவெட்டாக நாங்கள் மாறுவோம்” என்று அசாத் கூறியிருந்தாா்.

சிரியா மீதான சீனாவின் இன்றைய சுற்றி வளைப்புக்கு அசாத்தின் “ஐந்து கடல் பார்வை” என்ற கடல்களை இணைக்கும் திட்டமே காரணமாக அமைந்துள்ளது. உலகில் முக்கிய கடற் பிராந்தியங்களை தனது ஆதிக்கத்திற்கு கொண்டு வரும் திட்டத்தில் மும்மரமாக ஈடுபட்டு வரும் சீனா, சிரியாவிற்கு கடன் வழங்கி மேற் குறிப்பிட்ட ஐந்து கடற் பிராந்தியங்களையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது.

சிரியாவின் லதாகியா துறைமுகம் (The port of Latakia) பசாா் அல் அசாதின் “ஐந்து கடல் பார்வை”க்கு முன்னோடி தளமாக இருக்கிறது, மேலும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மிகப்பெரிய துறைமுக வசதிகளைக் கொண்ட தளமாக மாறும் சாத்தியக்கூறுகளுடன்,மிகப்பாரிய சீன முதலீட்டிற்கான முதன்மை மையமாக இது அமையவிருக்கிறது.

ஈரான் நாடு கூட, லதாகியா துறைமுகத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ளதோடு, சிரியாவுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ரஷ்யா, சிரியாவிலுள்ள டார்டஸ் துறைமுகத்தில் (The port of Tartus) ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்து அதில் ஒரு கடற்படைத் தளத்தைக் வைத்திருக்கிறது. இது லதாகியாவிலிருந்து சுமார் 85 கிமீ தெற்கே உள்ளது.

லதாகியா துறைமுகம், துருக்கியின் பொஸ்போரஸ் (Bosphorus) (இஸ்தான்புல் நீரிணை) வழியாக கருங்கடலுக்கான அணுகலையும், சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கான அணுகலையும் வழங்குகிறது. ரஷ்யா, எகிப்தில் உள்ள சஈத் துறைமுகத்தில் (Port Said) இலவச வர்த்தக வசதிகளைப் பெற்றுள்ளது.

2017 ஜனவரி 18 அன்று, ரஷ்யாவும் சிரியாவும் ஓா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி ரஷ்யா, டார்டஸ் துறைமுகத்தில் உள்ள கடற்படைத் தளத்தை 49 ஆண்டுகளுக்கு இலவசமாக விரிவுபடுத்தவும் பயன்படுத்தவும் மற்றும் தளத்தின் மீது இறையாண்மை அதிகாரத்தை அனுபவிக்கவும் அனுமதிக்கப்பட்டது.

அணுசக்திக் கப்பல்கள் உட்பட டார்டஸில் 11 போர்க்கப்பல்களை வைத்திருக்க ரஷ்யாவை இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

லெபனானிலுள்ள திரிபோலி துறைமுகம் (Tripoli port), சிரிய-லெபனான் எல்லைக்கு தெற்கே 20 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அந்த நாட்டிலுள்ள குழப்பமான அரசியல் சூழலுக்கு மத்தியில், சீனா அந்நாட்டில் முதலீடு செய்ய மிகுந்த ஆா்வத்தை கொண்டிருக்கிறது.

லெபனான் மற்றும் சிரியாவின் இரயில்வே அமைப்புகளை பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் கீழ் இணைக்க பெய்ரூட்- டிரிபோலி இரயில் பாதையை புதுப்பிக்கும் திட்டங்களை சீனா முன் வைத்துள்ளது. சீனா முன்வைத்துள்ள சிரியாவிற்கான மறுகட்டமைப்புத் திட்டத்தில் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு மூலோபாய ரீதியில் மையமாக அமைந்திருக்கும் டிரிபோலி துறைமுகத்தை, சிறப்புப் பொருளாதார மண்டலமாக நிறுவுவதற்கு சீனா தயாராகி வருகிறது.

சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனம் (China Harbor Engineering Company) மிகப்பெரிய சரக்குக் கப்பல்களை உள்வாங்கும் வகையில் திரிபோலி துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது.

லெபனானில் சிரிய எல்லைக்கு அண்மையில் உள்ள ரீனிஹ் முஅவ்வத் விமான தளத்தை (Rene Mouawad Air Base) விரிவுபடுத்த சீனா உதவியது, அதை முக்கியமாக இராணுவ தளத்திலிருந்து சிவிலியன் விமான நிலையமாக மாற்றியது.

2016 ஆம் ஆண்டில், எகிப்து சீனாவின் BRI இல் இணைந்தது. அதே ஆண்டு, ஜனாதிபதி சிஜின்பிங் எகிப்துக்கு விஜயம் செய்தார். இரு நாடுகளுக்குமிடையில் 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள 21 கூட்டாண்மை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

சீனா தனது கடல் பட்டுப்பாதைத் திட்டதை்தை வைத்து கடல் சுற்றி வளைப்பை செய்வதில் முன்னேறி வருகிறது. இதற்காக பல பில்லியன் டொலர்களை சீனா செலவுசெய்து வருகிறது. இன்றைய பூகோள அரசியலில் கடலாதிக்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் காரணமாகவே சீனா பல கடற்பிராந்திய முனைகளில் உள்ள நாடுகளில் மூலோபாய ரீதியில் துறைமுகங்களை புதிதாக உருவாக்கியும், மேம்படுத்தியும் தனது புவியரசியலை கட்டமைத்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.