;
Athirady Tamil News

புத்தமதத்துக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பது ஏன்? (கட்டுரை)

0

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது.

வரலாற்றுக்காலத்தில், பௌத்தம் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசமதமாக நிலவி இருக்கின்றது. மத்திய, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் இன்றும் தேரவாத, மகாயான மற்றும் வச்சிரயான பௌத்த மரபுகளைக் காணமுடியும்.

புத்தர் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை, மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி , பகுதியிலேயே கழித்திருக்கிறார். பல்வேறு குலத்தைச் சேர்ந்தோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்கள் ஆனார்கள். தன் போதனைகளை உள்ளூர் மொழிகளில் அல்லது வட்டார வழக்குகளிலேயே கற்பிக்கவேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார். சிராவஸ்தி, ராஜகிரகம் மற்றும் வைசாலி நகர்களின் அருகே போதனைகளைத் தொடர்ந்த புத்தர். 80 வயதில் மரிக்கும் போது, ஆயிரக்கணக்கான பின்பற்றுநர்கள் அவருக்கு இருந்தார்கள்.

புத்தரின் மறைவை அடுத்த 400 ஆண்டுகளில்: பல்வேறு உட்பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றலாயின. அவற்றுள் நிகாய பௌத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று தேராவத எனும் நிகாய பௌத்தம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அடுத்து வந்த காலங்களில், மகாயான மற்றும் வஜ்ரயான, பிரிவுகள் உருவாகின. புத்தரைப் பின்பற்றுபவர்கள், ஆரம்பத்தில் தம்மை சாக்கியன், சாக்கியபிக்கு என்ற பெயர்களில் அழைத்துக்கொண்டனர். பிற்காலத்தில் பௌத்தர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்

புத்தரபிரான் அவதரித்ததும், அவர் ஞானம் பெற்றதும், பரிநிர்வாணம் அடைந்ததும் வைகாசிமாத (போயா) பௌர்ணமி தினங்களிலே நிகழ்ந்துள்ளதாக பௌத்த சமய நூல்கள் கூறுகின்றன. இவ் சிறப்பு மிக்க வைகாசிமாத பூரணை தினத்தையே பௌத்த மதத்தினர் ”வெசாக் பண்டிகையாக” கொண்டாடுகின்றனர்.

அதேபோல் பெளத்த தர்மம் இலங்கைக்கு (முதல் முறையாக) அறிமுகம் செய்து வைக்கப்பெற்றதும் ஒரு பூரணை தினத்திலேயாகும். இந் நிகழ்வானது ஆனி மாத பூரணை தினத்திலேயே நிகழ்ந்துள்ளது.

அதனால் இப் பூரணை தினத்தையே ”பொசன்” பூரணை (போயா) தினமாக பௌத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர். பூரணை தினத்தை புனித நாளாக இந்து சமயம் போற்றுவதுபோல் பௌத்த சமயமும் போற்றுகின்றது.

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் கௌதம புத்தர் பிறந்தார். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர்.

கி.மு. 328ஆவது ஆண்டில் ஒரு பொசன் போயா தினத்தன்று இந்திய சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தியாகிய அசோக சக்கரவர்த்தியின் மகள் துறவறம் பூண்ட இளவரசி சங்கமித்தை தேரர் தனது சகோதரனான இளவரசர் அரஹட் மஹிந்த தேரருடன் இலங்கைக்கு வந்து மிஹிந்தலை மலை உச்சியில் இலங்கையில் அரசாட்சி புரிந்து வந்த தேவநம்பியதீச மன்னனை சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது

கலிங்கப் போரில் தன்னை எதிர்த்துப் போராடிய எதிரிநாட்டு படைகளை போர் முனையில் படுதோல்வியடையச் செய்த சக்கரவர்த்தி அசோகன் அன்றிரவு போர்களத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட இழப்புக்களை கண்காணித்துக் கொண்டிருந்த போது; போர் வீரர்கள் பலர் அங்கவீனர்களாகவும் குற்றுயிராயும் அவஸ்த்தைப்படுவதையும், ஒரு வயோதிபப் பெண் ஒரு இளம் போர் வீரரின் சடலத்தை தனது மடியில் வைத்து கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்த காட்சியையும் பார்த்து மனம் நெகிழ்ந்து போன அசோக சக்கரவர்த்தி, குனிந்து அந்தப் பெண்ணிடம், ஏன் அம்மா அழுகிறீர்கள்? என்று கருணையுடன் கேட்டிருக்கிறார்.

அப்போது, போர் முனையில் எங்கள் நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டுப் படைகள் எனது மகனை கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்த அந்த வயோதிப மாது நீங்கள் யார் என்று அசோக சக்கரவர்த்தியிடம் கேட்டிருக்கிறார்

அதற்கு பதிலளித்த சக்கரவர்த்தி நான் தான் ”சாம்ராட் அசோக சக்கரவர்த்தி” என்று பதிலளித்தவுடன் வேங்கையைப் போன்று கொதித்தெழுந்த அந்த வயோதிப மாது, நீ ஒரு சக்கரவர்த்தி அல்ல. அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் மிருகமென்று கத்தி அழுது கொண்டே மயக்கமடைந்தார். இந்த சம்பவங்களினால் மனம் நொந்துபோன அசோக சக்கரவர்த்தி செய்வதறியாது இத்தனை உயிர்களை பலிகொண்டு கலிங்கப் போரில் நான் அடைந்த வெற்றியினால் எதனை சாதிக்கப்போகிறேன் என்று நிலை தடுமாறி வேதனையில் மூழ்கியிருந்த போது அவருக்கு போதி மரத்து மாதவன் புத்தபெருமானின் நற்போதனைகளின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அன்று முதல் அசோக சக்கரவர்த்தியின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. யுத்தம், இரத்தக் களரி, கொலை போன்ற தீய எண்ணங்களை அடியோடு துறந்துவிட்ட அசோக சக்கரவர்த்தி பெளத்த மதத்தை தழுவி பெளத்த மதத்தின் நற்போதனைகளை பரப்பும் பணியை ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அரச குடும்பமே பெளத்த மதத்தைத் தழுவிக்கொண்டது. உடனடியாகவே மகன் மஹிந்தையையும் மகள் சங்கமித்தையையும் புத்த சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுத்தினார். இந்த பெளத்த தர்மத்தை போதிக்கும் பணிக்கு தனது மகன் இளவரசர் மஹிந்தவையும், மகள் இளவரசி சங்கமித்தையையும் சக்கரவர்த்தி தேர்ந்தெடுத்தார். பின்னர் காவி உடையணிந்து பெளத்த தர்மத்தை உலகத்திற்கு பரப்பும் பணிக்காக துறவறம் பூண்ட அரஹட் மஹிந்த இலங்கைக்கு வந்து மன்னன் தேவநம்பிய தீசனை சந்திக்கச் சென்ற போது, மன்னன் மிஹிந்தலை மலை உச்சியில் மான் வேட்டையாடிக் கொண்டிருப்பதை அவதானித்தனர்.

தேவநம்பிய தீச மன்னனை அணுகிய இவ்விரு துறவிகளும் பெளத்த தர்மத்தை அவரிடம் போதித்து, கருணாமூர்த்தி புத்த பெருமானின் போதனைக்கு அமைய கருணையுள்ளம் கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று போதனை செய்தனர். இவர்களின் இந்த பெளத்த போதனையை கேட்டு மனம்மாறிய தேவநம்பியதீச மன்னன் மிருகங்களை வேட்டையாடுவதை அடியோடு விட்டு பெளத்த தர்மத்தை தனது பல்லாயிரக்கணக்கான மக்கள் சகிதம் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வே இலங்கையில் பெளத்த தர்மம் தழைத்தோங்குவதற்கான ஆரம்பமாகும். அசோக சக்கரவர்த்தி இலங்கைக்கு போதனை செய்த பெளத்த தம்மம் சீனா, ஜப்பான், தூரகிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கும் பரவிய போதும் இலங்கையில் தான் பெளத்த தர்மம் வலுவாக நிலை கொண்டது. இதனையடுத்து இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் பெளத்த விகாரைகளையும், பெளத்த தூபிகளையும் நாடெங்கிலும் நிர்மாணித்தனர்.

மிஹிந்தலை மலையில் முதன் முதலில் தேவநம்பியதீச அரசனை சந்தித்த மஹிந்த தேரர் பெளத்த தர்மத்தின் தத்துவத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா, அவரின் அறிவின் தரத்தை அறிந்து கொள்வதற்கும் பல கேள்விகளை எழுப்பினார். நாம் உண்மைத் தத்துவத்தை உலகத்திற்கு உபதேசித்த ஒரு பெரியாரின் நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கிறோம் என்று கூறி பெளத்த தர்மத்தை போதித்த போது அதனை தேவநம்பியதீச மன்னன் ஏற்றுக் கொண்டு அன்றிலிருந்து பெளத்த தர்மத்துக்கு அமைய தன்னுடைய மற்றும் நாட்டு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தார். அந்த சம்பவத்தினால் பெளத்த தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் துறவறம் பூண்டு நாடெங்கிலும் பெளத்த தர்மத்தை பரப்பினர். இந்த நிகழ்வு இலங்கையில் கலாசார மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு வழிகோலியது.

அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தை தேரர் இலங்கைக்கு வந்தபோது கொண்டு வந்த புத்த பெருமான் புனிதத்துவம் அடைந்த அரச மரத்தின் கிளையொன்றை அனுராதபுரத்தில் நாட்டி இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுதப்பெற்றமையை நினைைவு கூர்ந்தனர். இந்தக் கிளை இன்று ஒரு பெரிய விருட்சமாக மாறி ”ஸ்ரீமாபோதி” என்ற பெளத்த புனிதத் தலங்களில் பிரதான நிலைக்கு வந்துள்ளது. பெளத்த தர்மம் இலங்கைக்கு அறிமுகமாகிய பொசன் போயா தினம் புதியதோர் கலாசாரத்தையும் அமைதியான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

ஆசையே துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்து ”பௌத்த மதம்” என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர் சித்தாத்தர் எனும் இயற்பெயர் கொண்ட கௌதம புத்தராவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.