;
Athirady Tamil News

“முன்னாள் போராளி தம்பதிகளுக்கு” “M.F” ஊடாக, வாழ்வாதாரமாக நிரந்தரமான கோழிக்கூடு வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

“முன்னாள் போராளி தம்பதிகளுக்கு” “M.F” ஊடாக, வாழ்வாதாரமாக நிரந்தரமான கோழிக்கூடு வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

இயலாத நிலையில் வாழும் “முன்னாள் போராளி தம்பதிகளுக்கு” “M.F” ஊடாக, “வாழ்வாதாரமாக” நிரந்தரமான கோழிக்கூடு வழங்கப்பட்டது.
###################################

முல்லைத்தீவு உடையார்கட்டு மூங்கிலாறு கிராமத்தில் வாழும் முன்னாள் போராளிகள் குடும்பம் ஒன்று மிகவும் வறிய நிலையில் மூன்று பிள்ளைகளோடு வாழும் நிலையில் குடும்பத் தலைவரான முன்னாள் போராளி யுத்த காயங்களினால் எந்தவிதமான வேலையும் செய்ய முடியாத நிலையில், அவரால் கதைக்கவோ, நடக்கவோ முடியாத சூழலில் வாழ்கின்றார். இவரின் மனைவியும் ஒரு முன்னாள் போராளி. இவரும் யுத்த காயங்களால் பாரிய வேலைகள் செய்ய முடியாத நிலை. இவர்களின் மூத்த மகள் எறிகுண்டு சிதறல்கள் பட்டு தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்..

இவ்வாறான சூழ்நிலையில் தமது வாழ்வாதார தேவைக்கு கோழிகள் வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சீவியம் செய்து வரும் நேரத்தில் “மாணிக்கதாசன் நற்மணி மன்றத்தின்” வாழ்வாதார உதவிகள் பற்றி கேள்விப்பட்டு, கோழிக் கூட்டுக்கான கோரிக்கை விண்ணப்பத்தினையும், வாய் மூலமான கோரிக்கை வீடீயோப் பதிவினையும், கிராம சேவையாளரின் சிபாரிசுடன் எமக்கு அனுப்பி வைத்த போது அதனை எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வாட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்திருந்தோம்.

இப்பதிவினைப் பார்த்த பலரும், ஏதோவொரு வழியில் இவர்களுக்கு உதவ முன்வந்தாலும், புங்குடுதீவைச் சேர்ந்த கனடா நாட்டில் வசிக்கும் “நம் தாயகம்” ராஜா அவர்கள் மிகுந்த பிரயாசைப்பட்டு எப்படியாவது முன்னாள் போராளிகள் தம்பதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முயற்சி செய்ததின் பயனாக, யாழ்.தாவடியைச் சேர்ந்தவரும், கனடா நாட்டில் வசிப்பவருமான திருமதி கெங்காதேவி அவர்கள் முழுமையாக நிரந்தரமான கோழிக் கூட்டினை அமைத்து தருவதற்கு முன்வந்தார்.

தனது மகளான தர்மிகா அவர்களின் பிறந்தநாள் பரிசாக இதனை செய்து தருவதற்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டுக் கொண்டார். இவ் அளப்பரிய பணியில் திருமதி கெங்காதேவி அவர்களின் ஏனைய மகள்களும், பிறந்த நாளைக் கொண்டாடும் தர்மிகாவின் சகோதரிகளுமான திருமதி கௌசிக்கா, செல்வி திவ்விக்கா, கௌசிகாவின் செல்ல மகளான வெண்ணிலா ஆகியோர் நிரந்தரமாக அமைக்கப்படும் கோழிக்கூட்டிற்கு தமது நிதிப் பங்களிப்பை வாரி வழங்க முன்வந்தனர்.

அந்தவகையில் கனடா வாழ் உறவான திருமதி கெங்காதேவி மற்றும் அவர்களின் பிள்ளைகளால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட நிரந்தரமான கோழிக்கூடு கடந்த சித்திரை வருடப் பிறப்பன்று போராளித் தம்பதிகளுக்கு, முன்னாள் வடமாகாண அமைச்சர் கௌரவ கந்தையா சிவனேசன் (பவான்) அவர்களின் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த திருமதி கேதினி நந்தகுமார் அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கோழிக் கூட்டின் சில விடயங்கள் திருமதி கெங்காதேவி அவர்களுக்கும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” திருப்தி இல்லாத காரணத்தால் “செலவைப் பற்றி யோசிக்க வேண்டாம், கோழிக் கூட்டினை முற்றுமுழுதாக பூரணப்படுத்தி, அழகிய வர்ணப் பூச்சுக்களுடன் கையளிக்கும்படி” கேட்டுக் கொண்டதால், மீண்டும் கோழிக் கூட்டின் குறைநிறைகள் சரிபார்க்கப்பட்டு, இன்றைய நாளில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திருமதி கேதினி நந்தகுமார் அவர்கள் இன்றைய நாளிலும் கலந்து கொண்டு முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வசதியாக நிரந்தர கோழிக் கூட்டினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில் வழங்கி வைத்தார்.

இந்த நிரந்தரக் கோழிக் கூட்டினை இவர்களுக்கு எப்பாடுபட்டாவது செய்து கொடுத்திட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் பாடுபட்டு நிறைவேற்றிக் காட்டிய கனடா “நம் தாயகத்தின்” திருவாளர் உதயராஜா அவர்களுக்கும், முழுமையான நிதிப்பங்களிப்பை நல்கிய கனடாவாழ் திருமதி கெங்காதேவி அவர்களுக்கும், அவர்களின் மகள்களான செல்வி தர்மிக்கா திருமதி கௌசிக்கா செல்வி திவ்விக்கா கௌசிகாவின் செல்லமகள் வெண்ணிலா ஆகியோருக்கும் “போராளிக் குடும்பத்தின் சார்பிலும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பிலும் இருகரம் கூப்பி வணங்குகிறோம்.

வாழ்வாங்கு வாழ, வாழ வைத்த தெய்வங்களை மனதார வாழ்த்துகிறோம். இதையெல்லாவற்றையும் விட முன்னாள் போராளிகளான தம்பதிகள் கூறிய வார்த்தை ஒன்றே போதும் இந்த உதவியின் பெறுமதியைச் சொல்வதற்கு..
“நாங்கள் ஒரு சாதாரண கோழிக் கூடு கிடைக்கும் என இருந்தோம், இப்படி நிறைவான நிரந்தரமான கோழிக் கூடு கிடைக்குமென கனவிலையும் நினைக்கவில்லை இப்படி அழகாக சிறிது தருவீர்கள் என்று, கனபேர் உங்க வந்த பாத்திட்டு, படம் எடுத்திட்டுப் போனவ.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தான் எங்களுக்கு இப்படியொரு உதவி கிடைக்க வழி செய்திருக்கு.. இதை தந்த கெங்காதேவி அம்மாவை கையெடுத்து கும்பிடுறன்” என்ற வார்த்தை போதும் நிரந்தர கோழிக் கூட்டின் பெறுமதியை சொல்ல..

இந்த கைங்காரியத்தில் பங்கு கொண்ட அத்தணை இதயங்களுக்கும் ஈழத்தின் நன்றிகள்.,

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.

23.04.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.