;
Athirady Tamil News

கேரளாவில் தொடர் மழைக்கு குழந்தைகள் உள்பட 4 பேர் பலி..!!

0

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழை நீடிப்பதால் மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுபோல மலை கிராமங்களில் மழையால் மண்சரிவு ஏற்படலாம் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 7 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு உள்ளனர்.

மூணாறு, ஆலப்புழா, களமசேரி பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நேற்று பெய்த கனமழையின்போது மாநிலம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டியில் கால்வாயில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் இறந்தார். முப்பத்தடத்தில் ஆதித்தியன்(17) என்ற சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தார். தேவிக்குளம் பகுதிகளில் மழையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 8 மாத குழந்தை உள்பட 2 பேர் இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மழை நீடிப்பதால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 99 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.