;
Athirady Tamil News

தினமும் சிக்கன் சாப்பிட்டா ஏற்படும் பிரச்சினைகள் இவை தான்… !! (மருத்துவம்)

0

உலகில் சிக்கன் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் இறைச்சியும் சிக்கன். இந்த சிக்கனைக் கொண்டு பல அற்புதமான ரெசிபிக்கள் உலகில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் சிக்கனின் விலை மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது விலை குறைவு என்பதால் ஏழை எளியோரும் இதையே அதிகம் வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி சிக்கன் விலைக் குறைவில் கிடைப்பதால், பலர் தினந்தோறும் சிக்கனை வாங்கி சாப்பிடுகின்றனர்.

என்ன தான் சிக்கனில் புரோட்டீன் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருந்தாலும், எதையும் அளவோடு சாப்பிட்டால் தான், அவற்றின் பலனை முழுமையாகப் பெற முடியும். மாறாக சிக்கனை தினமும் சாப்பிட்டால், அதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாகும். இப்போது தினமும் சிக்கனை ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காண்போம்.

ஏராளமான மக்கள் சிக்கனை தினமும் சாப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் சிக்கன் சுவையானதாக இருப்பதோடு மட்டுமின்றி, சமைப்பதற்கு எளிதாகவும் இருப்பது தான். அதோடு பலர் சிக்கனை அதிகம் தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு காரணம், இது கொழுப்பு குறைவான இறைச்சி வகையை சேர்ந்தது. இதில் ஏராளமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. அதே சமயம் மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் இதில் கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதற்காக சிக்கனை தினமும் சாப்பிடுவது சரியாகுமா? நிச்சயம் இல்லை. தினமும் சிக்கனை சாப்பிட்டால் பின்வரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பல வகையான உணவுகளை உண்பது முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுப்பது பலனளிக்காது. இது சிக்கன் சாப்பிடுவதற்கும் பொருந்தும். அதிக அளவில் சிக்கனை உணவில் சேர்க்கும் போது, உடல் எடை அதிகரிக்கும், இதயம் பாதிக்கப்படும் மற்றும் ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும். இப்போது ஏன் சிக்கனை தினமும் சாப்பிடக்கூடாது என்பதற்கான சில காரணங்களைக் காண்போம்.

ஒருவரது தினசரி கலோரி உட்கொள்ளலில் 10 முதல் 35 சதவீதம் புரோட்டீனைக் கொண்டிருக்க வேண்டும். அதிகளவிலான புரோட்டீன் உடலில் கொழுப்புக்களாக தேங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது மற்றும் இரத்த லிப்பிட்டுகளின் அளவை உயர்த்துகிறது. தினமும் ஒரு பெரிய துண்டு சிக்கனை சாப்பிடுவது, தினசரி எடுக்க வேண்டிய புரோட்டீனை விட மிகவும் அதிகமான அளவில் உடலுக்கு புரோட்டீன் கிடைக்கும். எனவே உட்கொள்ளும் புரோட்டீனில் ஒரு கண் வைத்திருங்கள்.

தினமும் சிக்கனை சாப்பிடுவது, உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். கொழுப்புக்கள் அதிகமானால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் மட்டும் உடலில் கொழுப்புக்கள் அதிகரிக்காது. புரோட்டீன் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும், அது மறைமுகமாக இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்து, மரணத்தைக் கூட ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.

சிக்கன் போன்ற விலங்கு அடிப்படையான புரோட்டீனை அதிகமாக சாப்பிடுவது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதை கடினமாக்கும். தி ஹஃபிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, தினமும் இறைச்சியை சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் குறைந்த பி.எம்.ஐ கொண்டுள்ளனர்.

சிக்கனை கையாள்வது என்பது ஒரு கஷ்டமான விஷயம். இறைச்சியை ஒருவர் சரியாக சமைக்கவில்லை என்றால் அல்லது காய்கறிகள் வேக வைக்காத சிக்கனுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால், அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவான சால்மோனெல்லா உடலினுள் சென்று ஃபுட் பாய்சனை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இந்த பாக்டீரியா முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளைத் தாக்காமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது முக்கியம்.

கோழி பண்ணை வைத்திருப்பவர்கள், தங்கள் கோழிகளுக்கு ஆன்டி-பயாடிக்குகளைப் போடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். சிக்கனை சாப்பிடுவதன் மூலம், மனிதர்களுக்கு இந்த ஆன்டி-பயாடிக்கிற்கு எதிப்பாக மாறலாம். அதுவும் நீங்கள் ஏதேனும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, இந்த சிக்கனில் உள்ள ஆன்டி-பயாடிக் உடலினுள் சென்றால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உடல்நிலை சரியில்லாத போது சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.