;
Athirady Tamil News

ஆந்திர பெண் அமைச்சர் 60 உறவினர்களுடன் திருப்பதியில் தரிசனம்- பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கி.மீ. கணக்கில் இரவு, பகல் பாராமல் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்ய முடியாமல் 40 மணி நேரத்திற்கு மேலாக திருமலையில் தங்கி உள்ளனர். சாமி தரிசனம் செய்ய முடியாத ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். இலவச தரிசனத்தில் 3 நாட்களாக காத்திருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் சிபாரிசு கடிதங்கள் வழங்கக்கூடாது மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷா ஸ்ரீ சரண் தனது உறவினர்கள் 60 பேருடன் திருமலைக்கு வந்து தங்கினார். நேற்று காலை சுப்ரபாத சேவையில் அமைச்சர் உஷா ஸ்ரீ சரண் மற்றும் அவரது உறவினர்கள் 60 பேர் தரிசனம் செய்தனர். இதையடுத்து மீண்டும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் 60 பேரையும் அனுமதிக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகளிடம் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் 60 பேருக்கும் வி.ஐ.பி பிரேக் தரிசனம் வழங்க முடியாது. புரோட்டாக்கால் படி 15 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் மற்றவர்கள் பிரேக் தரிசனத்தில் தரிசனத்திற்கு செல்லலாம் என தெரிவித்தார். அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் தரிசனத்திற்கு சென்றதால் சிறிது நேரம் சாதாரண பக்தர்கள் தரிசனம் தடைபட்டது. கடந்த வாரம் கால்நடை துறை அமைச்சர் அப்பால ராஜு தனது உறவினர்கள், ஆதரவாளர்கள் 150 பேருடன் தரிசனம் செய்ததற்கு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் அமைச்சர் ஒருவர் 60 பேருடன் தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதியில் நேற்று 87,692 பேர் தரிசனம் செய்தனர். 36,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.