;
Athirady Tamil News

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் உடல் பலவீனமடையும்..!!

0

கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடல் இயக்க செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேலாக உடல் இயக்க செயல்பாடு இல்லாமல் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், புகைப் பிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு நிகரான ஆபத்தை சந்திப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொடர்ச்சியாக இருந்த இடத்தில் இருந்து வேலை செய்வது அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருந்தாலும் உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியமானது.

இல்லாவிட்டால் உடல் பலவீனமடையும்; உற்சாகமாக செயல்படவும் முடியாது. ஒருசில அறிகுறிகளை கொண்டே உடல் ஆரோக்கியத்தின் தன்மையை அளவீடு செய்துவிடலாம். அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், மாடிப்படி ஏறுவதற்குள் மிகவும் சிரமப்பட்டு மூச்சுவிட்டால், உடனே கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் இருக்கையில் சென்று அமர்வதற்குள் உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் உஷாராகிவிட வேண்டும். அது உடல் பலவீனத்திற்கான அறிகுறியாகும்.

தினமும் வேலைக்கு வருவதற்கு முன்பு உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். காலையில் அலுவலகம் செல்லும்போது இருக்கும் உற்சாகம், பணி முடிந்து செல்லும்போது நிறைய பேருக்கு இருக்காது. வீடு போய் சேருவதற்குள் சோர்ந்து போய்விடுவார்கள். குறிப்பாக வீட்டுக்கு சென்றதும் உடல் அசதியால், சாப்பிடக்கூட விருப்பமில்லாமல் தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். நாள் முழுவதும் இருந்த இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை என்பதுதான் அதற்கு காரணமாகும். எப்போதாவது கழிவறைக்கு சென்று வந்திருப்பார்கள். அப்படி கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆற்றலை சேமிக்காது.

மாறாக ஆற்றலை அபகரிக்கும். அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது சில நிமிடங்கள் எழுந்து நடமாடுவது நல்லது. நீண்டகாலமாக உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு தசை இயக்கங்களில் குறைபாடு ஏற்படலாம். உடல் இயக்க செயல்பாடு இல்லாமையின் காரணமாக, தசைகள் பலவீனமடைந்து இந்த பாதிப்பு ஏற்படும். உடல் தசைகள்தான் எல்லா இடத்திற்கும் உடலை தூக்கிக்கொண்டு செல்கிறது. தசைகள் உறுதியாகவோ, வலுவாகவோ இல்லாவிட்டால் உடல் பலவீனமடைந்துவிடும். ஆரம்பக்கட்ட அறிகுறியாக சோர்வு தோன்றும். பின்னர் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். ஆதலால் தசைகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.