;
Athirady Tamil News

மதுரையில் ரூ.600 கோடியில் ‘டைடல் பூங்கா’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

0

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மதுரை மண்டல மாநாடு, மதுரை மேரியாட் ஓட்டலில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். மேலும் அவர் தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், “தமிழ்நாடு பதிவுச்சட்ட திருத்தம்” செய்து, அதற்கான ஆன்லைன் வசதியும், வாடகை ஒப்பந்த பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியினையும் தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிட்கோ நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகள், கரூர் மாவட்டம், புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடி செலவிலும், ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டிடங்கள், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், கேர் திட்டம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி(தாய்கோ) மூலம் கடனுதவி வழங்குதல், தமிழ்நாடு அரசு கடன் உத்தரவாத திட்டம் உள்ளிட்டவற்றையும் தொடங்கி வைத்தார்.

தொழில் வளர்ச்சி
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொழில் வளர்ச்சி என்கிறபோது அது பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் உள்ளடக்கியதுதான். இந்த தொழில்கள் மூலமாகத்தான் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், பல லட்சம் குடும்பங்கள் வாழும். அந்த அடிப்படையில் இவற்றின் வளர்ச்சியை தமிழக அரசு முக்கியமானதாக கருதுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருது, மகளிர் தொழில்முனைவோர் விருது, தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருது, சிறப்புப்பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள் என்னால் வழங்கப்பட்டுள்ளன.

3-வது இடத்துக்கு முன்னேற்றம்
நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழ்நாடு 14-வது இடத்தில் இருந்து, இப்போது 3-வது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. அடுத்து முதல் இடத்தை பிடிப்பதே நமது இலக்கு. அதேபோல், ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசை பட்டியலில் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்கான ‘லீடர்’ அங்கீகாரத்தை தற்போது பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்கின்ற இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம் முக்கியமாகும். எனவே ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறோம்.

மதுரையில் பூங்கா
2000-ம் ஆண்டு கருணாநிதி, சென்னையில் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தினுடைய தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகருக்கு எடுத்துச் செல்ல, டைடல் நிறுவனம், கோவையில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கியதுடன் திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்களை அரசு உருவாக்கி வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் பின்டெக் போன்ற அறிவுசார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், 5 ஏக்கரில் இது அமைக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில், மேலும் 5 ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் பின்டெக் மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அது வழிவகுக்கும். முதல் கட்டத்தில், 10 ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர். குறுசிறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை. உங்களது தேவைகளைச் சொல்லுங்கள். நிறைவேற்றித் தருகிறோம். தமிழ்நாட்டுக்கு நிலையான வளத்தை நீங்கள் உருவாக்கித் தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, வெங்கடேசன், பூமிநாதன், மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.