;
Athirady Tamil News

தமிழ்நாட்டை செல்போன் உற்பத்தி மையமாக மாற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

0

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த தொழிற்சாலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெகாட்ரான் நிறுவனத்தின் தலைவர் ஜெங் ஜியான் ஜாங், மேலாண்மை இயக்குனர் லின் ஜியு டேன், முதுநிலை துணைத் தலைவர் டென்சி யாவ், முதன்மை செயல் அலுவலர் கியு ஷிங் ஜங், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மிகப்பெரிய பெருமை
உலகப் புகழ்பெற்ற பொருள் ஒன்று தமிழகத்தில் தயாராவது என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை. தலைவர் கருணாநிதி, முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில், ஹுண்டாய் வந்தது, போர்டு வந்தது, மிட்சுபிசி வந்தது என்று சொல்வதைப் போல, எனது ஆட்சிக் காலத்தில் இத்தகைய சிறப்பு வந்தது என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முதலீட்டாளர்களுக்குஆதரவான சூழ்நிலை
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் துவக்கியிருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னால் ஒரு தகவல் வெளியானது. அகில இந்திய அளவில் வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசையில், சாதனையாளர் மாநிலம் என்ற அங்கீகாரம் பெற்ற முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் அந்த செய்தி. அதற்கு இந்த பெகாட்ரான் நிறுவனமே சாட்சியாக அமைந்திருக்கிறது.

லட்சிய இலக்கு
ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் என்று மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன. மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. முன்னணி அடைந்தவுடன், முதல் நிலையை நோக்கி உயர வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். 2030-ஆம் ஆண்டிற்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களது லட்சிய இலக்கு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

வினியோகச் சங்கிலி
இதன் பொருட்டு, உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் திட்டங்களையும் ஈர்ப்பதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு துறையிலும், மதிப்புக் கூட்டு உற்பத்தி மேற்கொள்ளும் திட்டங்களையும், பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

தற்போது, சீனாவில்தான், புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி, தமிழ்நாட்டினை அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு வினியோகச் சங்கிலியையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விரைவில் தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை
நான்காம் தொழில் புரட்சியில் மின்னணுவியல் துறை, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாநிலத்தின் உற்பத்தி வரைபடத்தையே மாற்றி அமைத்திடக் கூடிய வல்லமை படைத்ததாக விளங்குகிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தத் துறையில் தமிழ்நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து, இந்திய அளவிலான மின்னணுவியல் சார்ந்த உற்பத்தியில், 20 சதவீதம் பங்களிப்பு வழங்கி வருகிறது. வெகு விரைவில் ‘தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை’ வெளியிடப்பட உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியைக் கணிசமாக அதிகரிப்பது என்ற நோக்கங்களுடன்தான், இவ்வாறான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று விழாவில் பேசும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.