;
Athirady Tamil News

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட் நம்பிக்கை..!!

0

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார். மற்றொருபுரம் ஆம்ஆத்மி தொண்டர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள மஹுவாவில் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பொதுமக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும். மோர்பி பாலம் விபத்து சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. குஜராத்தில் கள்ளச் சாராயத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை இனி பலிக்காது. இந்த முறை ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும். மோடியும், அமித்ஷாவும் வாரந்தோறும் குஜராத்திற்கு வந்தால் என்ன அர்த்தம்? அவர்களின் பலவீனமான நிலையை அது காட்டுகிறது. அதனால் இருவரும் இங்கு முகாமிட்டுள்ளனர். ராகுல் காந்தி, பாத யாத்திரைக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இதுவரை இங்கு வரவில்லை, ஆனால் அவர் எழுப்பும் பிரச்சினைகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும். இமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி திடீரென வாபஸ் பெற்றது குறித்து கேஜ்ரிவாலைக் கேட்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் யாருக்குத் தெரியும்? அவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்கிறார்களா? அவர்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.