;
Athirady Tamil News

5,00,000 பேருக்கு இலவச பயணச்சீட்டு – பிரபல நாடு அதிரடி அறிவிப்பு!!

0

உலகம் முழுவதிலும் சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்க 5,00,000 விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவுள்ளதாக ஹொங்ஹொங் அறிவித்துள்ளது.

சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இயங்கிவரும் ஹொங்ஹொங் (Hong Kong), சுற்றுலாவை புதுப்பிப்பதற்காக இலவச விமான பயணச்சீட்டுக்களை வழங்கவுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான கொரோனா தடைகளுக்குப் பிறகு, பார்வையாளர்கள் , வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களை திரும்பக் கவரும் வகையில் 5 லட்சம் இலவச விமான பயணச்சீட்டுகளை உள்ளடக்கிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

‘ஹலோ ஹொங்ஹொங்’ (Hello Hong Kong) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின் தொடக்கத்தில் நகரத்தின் தலைவர் ஜான் லீ, இது “ஒருவேளை உலகின் மிகப்பாரிய வரவேற்பாக இருக்கும்” என்று கூறினார்.

2019-ல் அடிக்கடி வன்முறைப் போராட்டங்கள், 2020-ல் கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கொரோனா பரவலின்போது மூன்று ஆண்டுகள் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்நகரத்தின் சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹொங்ஹொங்கின் உலகளாவிய பிம்பத்தை சரிசெய்யவும், பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் அரசாங்கம் முயற்சி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்லைன்ஸ் கேத்தே பசிபிக், ஹொங்ஹொங் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹொங்ஹொங் ஏர்லைன்ஸ் ஆகியவை மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இலவச விமான பயணசீட்டுக்களை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டக் குலுக்கல், 1 வாங்கினால் 1 இலவசம் விளம்பரங்கள் மற்றும் போட்டிகள் உட்பட பல்வேறு விளம்பர நடவடிக்கைகள் மூலம் விமான நிறுவனங்களிடமிருந்து 2 பில்லியன் ஹொங்ஹொங் டொலர்கள் மதிப்பிலான இலவச விமான பயணச்சீட்டுகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடையில் ஹொங்ஹொங்கில் வசிப்பவர்களுக்கு கூடுதலாக 80,000 விமான பயணச்சீட்டுகள் வழங்கப்படும், அதே நேரத்தில் கிரேட்டர் பே ஏரியாவில் வசிப்பவர்களும் இந்த பாலிசியிலிருந்து பயனடைவார்கள், எனவே மொத்தம் 700,000 பயணச்சீட்டுகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.