;
Athirady Tamil News

அரியலூர் மாவட்டத்தில் மண் குவாரிகள் உரிமம் நிறுத்திவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு!!

0

சென்னை ஐகோர்ட்டில், அரியலூர் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஆர்.கணேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தில் தெற்கே கொள்ளிடமும், வடக்கே வெள்ளாறும், மத்தியில் மருதையாறும் ஓடினாலும், பல பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் கிராவல் மண் வளம் அதிகம் உள்ளன. இந்த வகை மண், சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த மண் இயற்கை வளம் குறித்து எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளலாம், கிராவல் மண் எடுக்க குவாரி உரிமம் விருப்பம்போல் வழங்கப்படுகிறது.

என்னுடைய விவசாய நிலத்துக்கு அருகே, சிலர் கிராவல் குவாரிகளை நடத்துகின்றனர். அரசியல் செல்வாக்கு உள்ள இவர்கள், சில நிலங்களை வாங்கியும், ஏழை விவசாயிகளின் நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் குவாரிகளை நடத்துகின்றனர். இவர்கள் மண் எடுக்க தொடங்கி விட்டால், குவாரிக்கு அருகே உள்ள விவசாய நிலத்தை இவர்களிடம்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவர்களிடம் குவாரி நடத்த அரசு வழங்கியுள்ள உரிமம் குறித்து கேள்வி எழுப்பியதால், அடுத்த நாளே எங்களது விவசாய நிலத்தில் உள்ள முந்திரி மரங்களை அகற்றி, அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்து விட்டனர். இதுகுறித்து அரசுக்கு புகார் செய்துள்ளேன்.

இவர்கள் சுமார் 7 ஹெக்டேர் வரை குவாரி நடத்தி, சுமார் 20 முதல் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே, விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த உரிமத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஒப்பந்ததாரர் கிராவல் மண் எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளும், குவாரி உரிமம் எடுத்துள்ள விக்ரமாதித்தன், கவிதா, விஜயகாண்டீபன் ஆகியோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் வழங்கிய குவாரி உரிமங்களை நிறுத்தி வைக்க வேண்டும். விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.