;
Athirady Tamil News

2 வயது பெண் குழந்தையைக் கொன்று இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

0

புதுக்கோட்டை அருகேயுள்ள பூவரசக்குடியில், இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இணையவழி சூதாட்டத்தில் அவா் ரூ. 70 ஆயிரம் வரை பணத்தை இழந்ததால் விரக்தியில் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூவரசக்குடி, பிரகாசபுரத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா். இவரது மனைவி ஸ்ரீகா (24), மகள் தன்ஷிகா (2).

சரத்குமாருக்கும், ஸ்ரீகாவுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 8 மாதங்களாக சரத்குமாா் சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை ஸ்ரீகா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வாசல்படியில் குழந்தை தன்ஷிகா இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரது சடலங்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகா, கைப்பேசி வழியாக இணையவழி சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு ரூ. 70 ஆயிரம் பறிகொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் கைக்குழந்தையைக் கொன்று, தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.