;
Athirady Tamil News

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்- சுற்றுலா பயணிகளுக்கு தடை!!

0

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வனத்துறை சோதனைச்சாவடியில் முன்அனுமதி டிக்கெட் பெற வேண்டும். இதனையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுத்து வருகின்றனர்.

காட்டு யானை, காட்டுஎருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரிக்குள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது சாரல்மழை பெய்தாலும் வறண்ட நிலையே நிலவுகிறது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ பற்றி வருகிறது.

இதனை அணைக்கும் முயற்சியிலும் தீ தடுப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வனவிலங்குகள் இடம்பெயரும்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். தற்போது பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. எனவே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.