;
Athirady Tamil News

பிரதமர் நரேந்திர மோடி 12-ந்தேதி பெங்களூரு வருகை!!

0

தென்இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர், மைசூர் நகரங்கள் உள்ளன. இந்த இரு நகரங்களும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில் இருந்து மைசூரு இடையே 4 வழிச்சாலை உள்ளது. இவை இரண்டும் முக்கிய நகரங்களாக இருப்பதால் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழிச்சாலை அமைக்க வேண்டும் என கர்நாடகா அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. அதன்படி பெங்களூர்-மைசூர் இடையே 10 வழித்தடமாக எக்ஸ்பிரஸ் காரிடார் திட்டத்துக்கு 2014-ல் ரூ.4,100 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு அதிகரித்தது. தற்போது ரூ.8350 கோடி செலவில் பெங்களூர்-மைசூர் 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடார் பணி மேற்கொள்ளப்பட்டு முடிந்துள்ளது. இந்த 10 வழிச்சாலையில் 6 வழித்தடங்கள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கும், மீதமுள்ள 4 வழித்தடங்கள் சர்வீஸ் ரோடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நெடுஞ்சாலை பணிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பெங்களூரு-நிடகட்டா இடையே முதல் தொகுப்பு பணியும், நிடகட்டா-மைசூரு இடையே 2-ம் கட்ட பணியும் நடைபெற்றது. இந்த காரிடாரில் 4.22 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 9 பெரிய பாலங்கள், 44 சிறிய பாலங்கள், 4 ரெயில்வே மேம்பாலங்கள், 64 சுரங்கப்பாதைகள், 4 ஆர்ஓபிகள் (சாலை மேம்பாலம்), 5 புறவழிச்சாலைகளை பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை உள்ளடக்கி உள்ளது. இந்த காரிடாரில் ராமநகர் மாவட்டம் பிடதி, ராமநகர், சென்ன ராயப்பட்டணா, மண்டியா மாவட்டம் மத்தூர், ஸ்ரீரங்கப்பட்டணா என மொத்தம் 6 புறவழிச்சாலைகள் இணைய உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் முக்கிய இரு மாநகரங்களான பெங்களூர் மற்றும் மைசூர் இடையேயான சாலை பயண நேரமானது தற்சமயம் ஏறக்குறைய 3 மணிநேரமாக உள்ளது. புதிய விரைவுச்சாலையின் மூலம் வெறும் 90 நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்த 2 நகரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு சென்றுவிட முடியும். வழக்கத்தை காட்டிலும் பயண நேரம் பாதியாக குறையும். இந்த புதிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள்கள் உள்பட ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் அனுமதிக்கப்பட போவதில்லை. இவற்றிற்காகவே சர்வீஸ் சாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 117 கி.மீ. தொலைவிற்கு நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலை பெங்களூரு, மைசூருக்கு இடையே நிடாகட்டா என்ற மற்றொரு முக்கிய நகரத்தையும் ஒருங்கிணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளில் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கப்பட்டணா நெடுஞ்சாலை உடன் இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த இணைப்பிற்காக 7 கி.மீ. நீளத்திற்கு இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.

ரூ.9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலையை 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே கெஜ்ஜலகெரேயில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அந்த அதிவிரைவு சாலையை திறந்து வைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி மண்டியாவில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த உள்ளார். இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.