அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்பட 3 பேர் குற்றவாளிகள்; ஆயுள் தண்டனை

கடந்த 2022ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அங்கிதா பண்டாரி வழக்கில், முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்திருக்கிறது.
2022ஆம் ஆண்டு நடந்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் 14 மாதங்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், பாஜக முன்னாள் தலைவரின் மகன் புல்கித் ஆர்யா உள்பட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கும் கோட்டுவார் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தையே உலுக்கிய 19 வயது பெண் அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், புல்கித் ஆர்யா, சௌரவ் பாஸ்கர் மற்றும் அங்கித் குப்தா ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை விதித்ததோடு, தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் வனாந்தரா விடுதியில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்த அங்கிதா கொலை வழக்கில், இன்று காலை மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் மூவருக்குமான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி?
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி அங்கிதா காணாமல் போன நிலையில், அவரது உடல் சிலா கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. இது நாட்டையே உலுக்கிய நிலையில், இதன் பின்னால் இருந்த குற்றவாளிகளுக்கு அரசியல் பின்புலம் காரணமாக வழக்கு விசாரணையிலும் முரண்பாடு இருந்துள்ளது.
குற்றவாளிகளுக்கு சாதகமாக விசாரணை அமைப்பு செயல்படுவதைப் பார்த்த மக்கள் கோபமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து 500 பக்கக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் 97 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணை தொடங்கியபோது அதிலிருந்து 47 பேர் நீக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், பாஜக தலைவராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா உள்ளிட்ட மூவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், துன்புறுத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், விடுதிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு சேவை வழங்குமாறு புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரியை வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்ததால், இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் தெரிய வந்தது.
சம்பவம் நடைபெற்ற செப்டம்பர் 18 அன்று, குற்றவாளிகள் மூவருடன் அங்கிதா ரிஷிகேஷ் சென்றுள்ளார். திரும்பும் போது, மூவரும் குடித்துவிட்டு அங்கிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, விடுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்லிவிடுவேன் என்று அங்கிதா மிரட்டியதால், மூவரும் சேர்ந்து அவரை கால்வாயில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.