;
Athirady Tamil News

இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவல் | கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!!

0

இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்சா வைரஸ் பருவ காலத்தில் பரவும் காய்ச்சல் ஆகும். தற்போதைய பருவநிலை மற்றும் பொதுமக்களின் சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களால் இன்ஃப்ளூ யன்சா ஏ வகையை சேர்ந்த எச்3என்2 மற்றும் எச்1என்1 வைரஸ்கள் பரவி வருகின்றன. அடினோ வைரஸும் பரவுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஃப்ளூயன்சா ஏ வகையை சேர்ந்த எச்3என்2 வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அதோடுஎச்1என்1 வைரஸ், அடினோ வைரஸும் பரவி வருகின்றன. சிறார், முதியோர் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் இந்த வகை வைரஸ்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்திருக்கிறது. எனினும் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அந்த மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பரிசோதனைகளை அதிகரிப்பது, கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிப்பது, உரிய சிகிச்சை அளிப்பது ஆகிய நடைமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். கரோனா தடுப்பு முறைகளை பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

25.4 சதவீத அடினோ வைரஸ்: கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட வைரஸ் பரிசோதனைகளில் 25.4 சதவீத மாதிரிகள் அடினோ வைரஸ் என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ், அடினோ வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். நீரிழிவு நோய், இதயநோய், கல்லீரல் நோய் மற்றும் நாள்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோரை இவ்வகை வைரஸ்கள் தொற்றினால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும்.

வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். தும்மும் போதும் இருமும் போதும் வாய், மூக்கை துணியால் மூட வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்த வேண்டும்.

கரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட தடுப்பு நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் இப்போது கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இவ்வாறு சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

அச்சப்பட தேவையில்லை – நிபுணர்கள் கருத்து: கர்நாடகாவை சேர்ந்த ஹிரே கவுடா (78), ஹரியாணாவை சேர்ந்த 56 வயதான நபர் ஆகியோர் எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் அண்மையில் உயிரிழந்தனர். இந்நிலையில் அச்சப்பட வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் தருண் சஹானி கூறும்போது, “புதிய வகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க கரோனா பெருந்தொற்று கால நடைமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது. புதிய காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.

தேசிய இளையோர் அறிவியல் அகாடமியை சேர்ந்த வைரஸ் நிபுணர் உப்சனா ராய் கூறும்போது, “நாட்டில் தற்போது பரவும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் சாதாரண பருவநிலை காய்ச்சல் ஆகும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மூலம் இந்த காய்ச்சல் பரவலை தடுக்க முடியும். காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை” என்றார்.

எச்3என்2 காய்ச்சலுக்கு ஒசெல்டாமிவிர் என்ற மருந்தை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்த மருந்து இலவசமாகக் கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.