மியான்மர்-வங்கதேசம் இடையே மோக்கா புயல் கரையை கடந்தது: 200 கிமீ வேகத்தில் சூறாவளி வீசியது!!

மிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்த மோக்கா மியான்மர் -வங்கதேசம் இடையே நேற்று கரை கடந்தது. அப்போது, கடலோர பகுதிகளில் 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மியான்மரின் கியாக்பியு மற்றும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் வழியாக புயல் கரையை கடக்கத் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளில் வங்கதேசத்தை தாக்கும் மிக சக்திவாய்ந்த மோக்கா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால் இரு நாடுகளிலும் கடலோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
காக்ஸ் பஜார் பகுதியில் மியான்மரில் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் முகாம்கள் உள்ளன. இதற்கிடையே, சிட்வே துறைமுக நகரில் புயல் கரை கடந்த போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் காக்ஸ் பஜார் மற்றும் செயின்ட் மார்ட்டின் தீவில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்ததாகவும், மரங்கள் வேரோடு சரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். புயலால் பலர் காயமடைந்திருப்பதாக செயின்ட் மார்ட்டின் தீவின் நிர்வாக தலைவர் முஜிபுர் ரஹ்மான் கூறி உள்ளார். புயல் காரணமாக வங்கதேசத்தில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ரோஹிங்கியா முஸ்லிம்கள் முகாம் உள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரித்ததைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. கடைசியாக கடந்த 2007ல் வங்கதேசத்தை மிகசக்தி வாய்ந்த சிதிர் புயல் தாக்கியது. அப்போது 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.