தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும் – ராகுல் காந்தி !!
இந்தியாவில் அரசியல் சாசனம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது.
‘தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும்” என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
“இந்தியர்கள் புத்திசாலிகள் என அமெரிக்கா சொல்கிறது எனில் அதற்கு காரணம் நீங்கள்தான். இந்தியாவின் மரியாதையையும் கலாசாரத்தையும் சுமந்து நிற்கிறீர்கள்.
இந்திய அரசியல் சாசனம் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்டுள்ளதோடு அனைத்து மொழிகள், கலாசாரம், வரலாறு போன்றவற்றைப் பாதுகாக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியும் வலதுசாரி இந்து அமைப்பும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் மொழி என்பது தமிழர்களுக்கு மிகவும் உயர்வானது; அது ஒரு மொழி மட்டும் அல்ல. அது தமிழர்களின் வரலாறு; கலாசாரம்; தமிழர்களின் வாழ்வியல் சார்ந்தது. ஒருபோதும் தமிழ் மொழியை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழ் மொழியை அச்சுறுத்துவது என்பது ஒட்டுமொத்த இந்தியா என்ற கட்டமைப்பையே அச்சுறுத்துவதாகவே நான் கருதுகிறேன்.
வங்க மொழி, பஞ்சாபி, கன்னட மொழி, இந்தி ஆகிய அனைத்தும் இந்தியாவில் தாக்குதலுக்குள்ளாகின்றன. இந்தியர்களாகிய நமது பலமே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஒருவரை ஒருவர் அங்கீகரித்து இணைந்து செயல்படுவதுதான் நமது பலம்.
நாங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினோம். அது இந்திய சமூகத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு எக்ஸ்ரே போன்ற பல்வேறு சமூகங்கள், சாதிகளைச் சேர்ந்த மக்களின் விவரங்களை கணக்கெடுக்கக் கூடியது.
இதன் மூலம் யார் யாருக்கு நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பது வரையறை செய்யப்படுவது எளிதானதாக இருக்கும். ஆகையால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாரதிய ஜனதாவுக்கு அழுத்தம் தருகிறோம். ஆனால் பாரதிய ஜனதா இதனை ஏற்க மறுக்கிறது.
எதனையும் புரிந்து கொள்ள மறுக்கிற- இந்தியாவில் தங்களுக்கு தான் அத்தனையும் தெரியும் என்கிற கூட்டம் தான் அதிகாரத்தில் இருக்கிறது” என உரையாற்றியுள்ளார்.