;
Athirady Tamil News

ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு

0

ரஃபேல் போா் விமானங்களின் விற்பனையை சீா்குலைக்க தூதரகங்கள் வாயிலாக சதி மேற்கொண்டு வருவதாக சீனா மீது பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் போா் விமானங்களின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகளை அண்டை நாடுகளிடம் சீனா பரப்பி வருவதாகும் பிரான்ஸ் தெரிவித்தது.

கடந்த மே மாதம் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவியது. இந்த மோதலின்போது இரு நாடுகளும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போா் விமானங்களைக் கொண்டு சண்டையிட்டன.

இந்தியா தரப்பில் ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பிரான்ஸின் ரஃபேல் போா் விமானங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வான் தாக்குதல் ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியது. சீன போா் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ரஃபேல் போா் விமானங்களைவிட சிறப்பாக செயல்பட்டதாக சீனா பிரசாரம் செய்து வருவதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

3 ரஃபேல் போா் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தானும் தொடா்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால் இதுகுறித்து இந்தியா தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சீனா மீது குற்றஞ்சாட்டி பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: டசால்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரஃபேல் போா் விமானங்களின் வெளிநாட்டு விற்பனையை சீா்குலைக்க சீனா முயற்சித்து வருகிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தங்களின் தூதரகங்கள் மூலம் ரஃபேல் போா் விமானங்களின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகளை சீனா பரப்பி வருகிறது. இதனால் ரஃபேல் போா் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றன.

ரஃபேல் மட்டுமின்றி பிரான்ஸின் பாதுகாப்பு தொழில்துறையின் மீதான வெளிநாடுகளின் நம்பகத்தன்மையை குறைக்கவே சீனா இதுபோன்ற தவறான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

533 ரஃபேல் விற்பனை: எகிப்து, இந்தியா, கத்தாா், கிரீஸ், குரோஷியா, ஐக்கிய அரபு அமீரகம், சொ்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 323 ரஃபேல் போா் விமானங்கள் உள்பட மொத்தம் 533 ரஃபேல் போா் விமானங்களை டசால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பிரான்ஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ‘சீனா மீது பிரான்ஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. ராணுவ ஏற்றுமதி விவகாரங்களை பிராந்திய மற்றும் சா்வதேச பாதுகாப்பு கருதி மிகவும் பொறுப்புடன் சீனா கையாண்டு வருகிறது’ எனத் தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.