தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: வீடுகள், சாலை, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின- 6 பேர் பலி!!
தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. முலுகு மற்றும் பூபாலபள்ளி மாவட்டங்களில் மேகவெடிப்பு (cloudburst) காரணமாக மழை கொட்டி தீர்த்ததில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஐதராபாத்தில் நேற்றில் இருந்து மழை இல்லை என்றபோதிலும், வாரங்கல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ”பிரதமர் மோடி மீட்பு பணிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ஐந்து தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது” என்றார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மும்பை மற்றும் ரெய்காட் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. கனமழை காரணமாக மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 6 வழிச்சாலையில் ஒரு வழியில் போக்குவரத்து தடைபட்டது.