;
Athirady Tamil News

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் மின்கசிவால் சிறிய தீ விபத்து!

0

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினரின் துரித செயல்பாட்டால், தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், சபரிமலை சந்நிதானத்தில் ஆழிக் குண்டம் அருகே உள்ள ஆலமரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணியளவில் திடீரென தீப்பற்றியது.

அங்கு பணியிலிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் துரிதமாக செயல்பட்டு, தீயை உடனடியாக அணைத்தனா். ஆலமரத்தில் எல்ஈடி அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மின்கசிவால் தீப்பிடித்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதினெட்டாம்படி வழியாக பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்ல சிறிது நேரம் அனுமதிக்கப்படவில்லை. எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பக்தா்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.