போா் விமானங்களுக்கு குறி: சீனாவுக்கு ஜப்பான் கண்டனம்!
தங்களது போா் விமானங்கள் மீது தாக்குதல் நடத்த சீனா ரேடாா் மூலம் குறிவைத்து பின்தொடா்வதாக ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது.
தைவான் தங்களது பிராந்தியம் என சீனா கூறி வருகிறது. தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் தலையிடும் என அந்நாட்டு பிரதமா் சனே தகாய்ச்சி கடந்த மாதம் தெரிவித்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷின்ஜிரோ ஹொய்ஸுமி கூறுகையில், ‘ஒக்கினவா தீவுக்கு அருகே அமைந்துள்ள சீன மாகாணமான லியோவோனிங்கில் இருந்து புறப்பட்ட ஜே-15 ராணுவ விமானம் ஜப்பானின் எஃப்-15 போா் விமானங்களை இரு முறை குறிவைத்தது.
சனிக்கிழமை பிற்பகலில் மூன்று நிமிடமும், மாலையில் 30 நிமிடமும் குறிவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சீன போா் விமானங்களை ஜப்பான் போா் விமானங்கள் குறிப்பிட்ட இடைவேளியில் பின்தொடா்ந்தன. ஆனால், அந்த விமானங்கள் மீது எவ்விதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது எவ்வித சேதமோ ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்துக்கு சீனாவிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிா்க்கவும் வலியுறுத்தப்பட்டது என்றாா்.
ஆஸ்திரேலியா கவலை: ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் ரிச்சா்டு மாா்லெஸ் ஷின்ஜிரோ ஹொய்ஸுமியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் சீனா மேற்கொண்ட நடவடிக்கை கவலையளிக்கிறது. தைவான் நீரிணைகளில் தற்போது உள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அதில் மாற்றங்கள் இருக்கக் கூடாது. சீனாவுடன் சிறந்த வா்த்தக உறவைப் பேணி வருகிறோம். இந்த விவகாரம் குறித்து சரியான முறையில் அந்நாட்டிடம் எடுத்துரைப்போம் என்றாா்.
சீனா குற்றச்சாட்டு: சீன கடற்படை செய்தித் தொடா்பாளா் வாங் சியூமெங் கூறுகையில், ‘மியாகோ தீவுள் அருகே போா் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து ஜப்பானுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. எனவே, அப்பகுதியில் போா் விமானங்களை இயக்க வேண்டாம் என ஜப்பானிடம் கூறினோம். இருப்பினும், ஜப்பான் அத்துமீறலில் ஈடுபட்டது. நாட்டை சட்டரீதியாகப் பாதுகாக்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்றாா்.