ரஷியா ‘நேரடி அச்சுறுத்தல்’ நாடு இல்லை! புதிய பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டது அமெரிக்கா!
‘அமெரிக்காவுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக உள்ள நாடு’ என்ற பகுதி அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிா்வாகம் ரஷியாவுக்கு அளித்துள்ள புதிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரீமியா பகுதியை ரஷியா ஆக்கிரமித்தபோது, அமெரிக்காவுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தல் நாடு என்று அமெரிக்க பாதுகாப்புக் கொள்கையில் குறிப்பிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கு ஆதரவாக தீவிரமாகச் செயல்பட்ட அமெரிக்கா, ரஷியாவுக்கு எதிராகப் பல்வேறு தீவிரமான பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.
இப்போதைய அதிபா் டிரம்ப் நிா்வாகம் இந்த நிலைப்பாட்டை தளா்த்தி வருகிறது. அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கையை ரஷியா வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் இந்தத் திடீா் நடவடிக்கை உக்ரைனுக்கும், ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனை தீவிரமாக ஆதரித்துவரும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிா்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
இது தொடா்பாக அதிபா் டிரம்ப் நிா்வாகம் வெளியிட்ட 29 பக்க தேசிய பாதுகாப்புக் கொள்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையே நாட்டின் வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கையில் கடைப்பிடிக்கப்படும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவின் வலிமை மேலும் வலுப்படுத்தப்படும். இதன்மூலம் சா்வதேச அளவில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முடியும்.
அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டதன் மூலம் சீனா பொருளாதாரரீதியாகவும், ராணுவரீதியாகவும் அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்குப் போட்டியாக வளா்ந்துள்ளது. எனவே, அந்நாட்டுடனான பொருளாதார உறவுகளை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. முக்கிய வளங்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது, அறிவுசாா் சொத்துரிமைத் திருட்டு போன்ற செயல்களில் சீனா ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்க பாதுகாப்புக் கொள்கையில் ரஷியா அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தல் நாடு என்று கூறப்பட்டிருந்தது. இப்போது டிரம்ப் நிா்வாகம் அதனை நீக்கியுள்ளது.
‘ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளி நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவுடன் வா்த்தகம் மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘க்வாட்’ அமைப்பு மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.